2010-05-14 15:30:35

திருத்தந்தையின் போர்த்துக்கல் நாட்டுக்கானத் திருப்பயண நிறைவு


மே14,2010 நாம் நமது இதயத்தின் கண்களால் கடவுளைக் காண வேண்டுமாயின் நமது அகத்தைப் பண்படுத்துவதில் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். கடவுள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, நிச்சயமான நம்பிக்கையின் எல்லையை நமக்கு முன்னர் திறந்து வைக்கிறது. இந்த நம்பிக்கை யாரையும் ஏமாற்றாது. இத்தகைய உணர்வுகளையே, 93 ஆண்டுகளுக்கு முன்னர் பாத்திமாவில் அன்னைமரியை ஆறுதடவைகள் காட்சியில் கண்ட முத்திப்பேறு பெற்ற ஜசிந்தாவும் பிரான்சிசும் வணக்கத்துக்குரிய லூசியாவும் கொண்டிருந்தனர். இதே உணர்வுகளுடனே நானும் பாத்திமாவுக்கு வந்துள்ளேன். நான் இயேசுவை அன்பு செய்கிறேன். குருக்கள் ஆண்டு நிறைவடையவிருக்கும் இந்நாட்களில், திருச்சபையும் அனைத்துக் குருக்களும் அவரை அன்பு செய்கின்றனர். அவர் மீது எப்பொழுதும் தம் கண்களைப் பதிக்க விரும்புகின்றனர் என்பதை பாத்திமா அன்னையிடம் அறிவிக்க வந்துள்ளேன்.

இவ்வாறு இவ்வியாழனன்று பாத்திமாவில் பயணத் திட்டங்களை நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அன்றைய நாளில் திருப்பலியில் கலந்து கொண்ட ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளில் தங்களையும் இணைத்துக் கொண்டிருந்த பல நோயாளிகளைத், திருநற்கருணையை ஏந்திப் பிடித்தவண்ணம் ஆசீர்வதித்தார். திருச்சபையில் அவர்களின் மதிப்பை உறுதிப்படுத்தினார். நோயின் துன்பங்களின் போது பயனற்றவர்களாக உணரத் தேவையில்லை. ஏனெனில் கிறிஸ்துவின் துன்பங்களோடு அவர்களும் தங்களை இணைக்கும் பொழுது அவரோடு சேர்ந்து மீட்பளிக்கும் பணியைச் செய்கிறார்கள் என்றும் தேற்றினார்.

வெவ்வேறு சமூகப்பணிகளுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் அமைப்புகளின் அங்கத்தினர்களை இவ்வியாழன் மாலை மூவொரு இறைவன் ஆலயத்தில் சந்தித்தார் திருத்தந்தை. திருச்சபையின் போதனைகள் உள்ளடக்கியிருக்கும் ஞானத்தைத் தங்கள் பணிகளில் பயன்படுத்துமாறு அவர்களை உற்சாகப்படுத்தினார்.

88 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மக்களைக் கத்தோலிக்கராகக் கொண்ட போர்த்துக்கல் நாட்டில், 2007ம் ஆண்டில் கருக்கலைப்பு சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. கர்ப்பம் தரித்த பத்து வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்வதற்குச் சட்டம் அனுமதி அளிக்கிறது. மேலும், ஒரேபாலினத் திருமணங்களைச் சட்டரீதியாக அங்கீகரிப்பதற்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. தற்போதைய சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் ஆன்மீகச் சூழல்களில் திருச்சபையின் சமூகப் போதனைகளுக்கு விசுவாசமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் மாலை 7மணியளவில் போர்த்துக்கல் நாட்டு ஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார். இந்த சந்திப்புடன் வியாழன்தின நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. பாத்திமாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஜசிந்தா, பிரான்சிஸ் லூசியா ஆகிய மூன்று சிறாருக்கு அன்னைமரி காட்சி கொடுத்த போது கூறிய மூன்று இரகசியங்கள் பிரபல்யமானவை. ஜசிந்தாவும் பிரான்சிஸ்க்குவும் முத்திப் பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டதன் பத்தாம் ஆண்டு, வணக்கத்துக்குரிய அருட்சகோதரி லூசியா இறந்ததன் ஐந்தாம் ஆண்டு நிறைவு, ஜசிந்தா பிறந்ததன் நூறாம் ஆண்டு – இந்த நிறைவுகளை இவ்வியாழனன்று பாத்திமாவில் சிறப்பித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நாடுகளின், இனங்களின், கருத்துக்கோட்பாடுகளின், குழுக்களின், தனிப்பட்டவர்களின் சுயஇலாபங்கள் மற்றும் சின்னச் சின்ன ஆசைகளின் பீடத்தில் மிகவும் புனிதமானவைகளைத் தியாகம் செய்ய மனித சமுதாயம் இன்னும் தயாராக இருக்கும்வேளை, பாத்திமாவின் இறைவாக்குப் பணி நிறைவடைந்து விட்டது என்று நாம் நினைத்தால் அது சரியாகாது என்று கூறினார். தினத்தாள்களும் திருத்தந்தையின் இந்தக் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வெள்ளி, நான்கு நாட்கள் கொண்ட போர்த்துக்கல் நாட்டுக்கானத் திருப்பயணத்தின் நிறைவு நாள். அன்று காலை பாத்திமா நகரிலிருந்து ஹெலிகாப்டரில் போர்த்தோ என்ற நகருக்குச் சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். போர்த்தோ, இந்நாட்டில் இரண்டாவது பெரிய நகரமாகும். சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் வாழும் இந்நகர் தொழிற்சாலை நகரமுமாகும். இந்நகரின் அவெனிதா தோஸ் அலியதோஸ் வளாகத்தில் காலை 10.15 மணிக்குத் திருப்பலியைத் தொடங்கினார். திருத்தந்தை காரில் சென்ற வழியெங்கும் இலட்சக்கணக்கான விசுவாசிகள் நின்று கைகளை ஆட்டி, திருத்தந்தை வாழ்க என்ற கோஷங்களை எழுப்பினர். இத்திருப்பயணத்தின் இந்த இறுதி நாளில் விசுவாசிகள் கடல் அலையென திரண்டிருந்தனர் என்று ஊடகங்கள் கூறின.

போர்த்தோ ஆயர் மானுவேல் தோ நாஷிமென்த்தோ கிளமென்ட் முதலில் வரவேற்புரை வழங்கினார். இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரையும் ஆற்றினார்.

இத்திருப்பலியின் இறுதியில் போர்த்தோ நகரசபை மாளிகை சென்று அங்கு பால்கனியில் நின்று மக்களை வாழ்த்தினார். அந்நகர சபையின் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

பின்னர் அங்கிருந்து 15 கிலோமீட்டரில் இருக்கின்ற போர்த்தோ சர்வதேச விமான நிலையத்துக்குத் திறந்த காரில் சென்றார். வழியெங்கும் மக்கள் நின்று பாப்பிறையை வாழ்த்தினர். விமானநிலையத்தில் பிரியாவிடை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். முதலில் திருத்தந்தை தனது இறுதி உரையை வழங்கினார். பின்னர் போர்த்துக்கல் அரசுத்தலைவர் திருத்தந்தையை வாழ்த்தி நன்றி தெரிவித்தார்.

அனைவரையும் ஆசீர்வதித்து உரோமைக்குப் புறப்பட்டார். போர்த்தோ நகரிலிருந்து 1,760 கிலோ மீட்டர் தூரம் கொண்ட உரோமையை அடைவதற்கான கால அளவு மூன்று மணி நேரமாகும். இத்துடன் திருத்தந்தையின் 15 வது வெளிநாட்டுத் திருப்பயணம், அவரின் போர்த்துக்கல் நாட்டுக்கானத் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது.

 








All the contents on this site are copyrighted ©.