2010-05-13 15:03:29

பிரிட்டனின் புதிய கூட்டணி அரசுக்கு கத்தோலிக்க ஆயர்கள் வாழ்த்து


மே13,2010 பிரிட்டன் சமுதாயத்தின் பொது நலனுக்கானத் தங்களது பணியைத் தொடங்கும் அந்நாட்டின் புதிய கூட்டணி அரசுக்குத் தங்களது செபங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள்.

பிரிட்டன் ஆயர்கள் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவையின் உதவித் தலைவரான பேராயர் பீட்டர் ஸ்மித், பிரிட்டன் சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள பல பிரச்சனைகளை, புதுப்பிக்கப்பட்ட பகிர்ந்து கொள்ளும் மதிப்பீடுகளின் வழியாகவே களைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நல்லதொரு நிலைக்கான மாற்றத்தை அரசியல்வாதிகளால் மட்டும் கொண்டுவர முடியாது என்பதால் இதில் எல்லாரின் பங்களிப்பு அவசியம் என்றும் பேராயர் தெரிவித்தார்.

பிரிட்டனில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர், 44 வயதாகும் டேவிட் கேமரூன் (David Cameron) பதவி ஏற்றுக் கொண்டார். 200 ஆண்டுகளில் மிக இளம் வயதில் பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்கும் இரண்டாமவர் என்ற பெருமையைப் பெறுகிறார் கேமரூன். இதற்கு முன்பு லார்ட் லிவர்பூல் தனது 42-வது வயதில் பிரிட்டிஷ் பிரதமரானார். தற்போதைய புதிய பிரதமர் இவர் 1966-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி பிறந்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தற்போதுதான் பிரிட்டனில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது உலகப் போரை முன்னிட்டு கூட்டணி ஆட்சி நடைபெற்றது.








All the contents on this site are copyrighted ©.