2010-05-12 16:20:44

திருத்தந்தையின் போர்த்துக்கல் நாட்டுக்கானத் திருப்பயண விளக்கம்


மே12,2010 கத்தோலிக்கத் திருச்சபை தனது விசுவாசத்தை வாழ்ந்து காட்ட வேண்டும், அவ்விசுவாசத்திற்குச் சாட்சியாகத் திகழ வேண்டும், நற்செய்தியின் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற அழைப்புடன் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் போர்த்துக்கல் நாட்டுக்கானத் தமது முதல் திருப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இச்செவ்வாய்க்கிழமை இந்திய நேரம் மாலை 3.30 மணிக்கு போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனை சென்றடைந்த திருத்தந்தை விமானநிலைய வரவேற்புக்குப் பின்னர் லிஸ்பன் திருப்பீடத் தூதரகம் சென்று சிறிது நேரம் இளைப்பாறினார். பின்னர் காரில் அரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று போர்த்துக்கல் அரசுத்தலைவர் Anibal Cavaco Silva வைத் தனியே சந்தித்துப் பேசினார். பின்னர், அரசுத் தலைவர், அவரது மனைவி, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என அனைவரையும் சந்தித்தார். இறைவன் உங்களைத் தமது அருளாலும் ஒளியாலும் நிரப்புவாராக என்று சொல்லி, அவர்களது பணிக்கு வாழ்த்தும் கூறினார். இம்மாளிகையிலுள்ள தங்கப்புத்தகத்தில் கையெழுத்திட்டார். போர்த்துக்கீசிய குடியரசு தனது நூற்றாண்டைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், நீங்கள் அனைவரும் நீதியான சமுதாயத்தையும் எல்லாருக்கும் நல்லதோர் எதிர்காலமும் அமைய உழைப்பதில் வளர்வீர்களாக என்று வாழ்த்தி அப்புத்தகத்தில் எழுதினார். இம்மாளிகை வளாகத்தில் Jerónimos தியான யோக துறவுமடமும் Belem கோபுரமும் உள்ளன. இந்தத் துறவுமடம் 1502க்கும் 1580க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இதனை அரசர் முதலாம் மானுவேல், புனித ஜெரோம் துறவு சபையினருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். இச்சந்திப்பை முடித்து அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவு அருந்தினார். செவ்வாய் உள்ளூர் நேரம் மாலை 6 மணி 15 நிமிடங்களுக்கு திறந்த வெளியில் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை.

இத்திருப்பலியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விசுவாசிகள் "Bento XVI," நீடூழி வாழ்க என்ற அட்டைகளை ஆட்டிக் கொண்டும் பாடிக் கொண்டும், ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 16ம் பெனடிக்ட் என்பதை போர்த்துக்கீசிய மொழியில் "Bento XVI," என்று சொல்கிறார்கள். இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரைக்குச் செவிசாய்ப்போம்.

RealAudioMP3 மழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பில் சொல்லப்பட்டிருந்தாலும் மழை பெய்யாமல் மிதமான சூரிய ஒளி வீசிக் கொண்டிருந்தது. இவ்வளாகத்துக்கு அருகில் ஓடும் Tagus ஆறும் சூழலை இதமாக்கியதாக எம் நிருபர்கள் கூறினர். போர்த்துக்கல் மக்கள் தொகையில் 88 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். எனினும் கத்தோலிக்கத்தை அன்றாட வாழ்க்கையில் கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. தலத்திருச்சபை அதிகாரிகள் இந்நிலை குறித்து கவலை கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, கடந்த 25 ஆண்டுகளில் திருமணம் செய்வோரின் விகிதம் 40 விழுக்காடு குறைந்துள்ளது. இதே காலக் கட்டத்தில் திருமண முறிவுகளும் இதே நிலையில்தான் உள்ளன. கடந்த 35 ஆண்டுகளில் குருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையும் சுமார் 60 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த ஒரு சூழலில், திருத்தந்தை இச்செவ்வாயன்று லிஸ்பனுக்குச் சென்ற விமானப் பயணத்தில், நிருபர்களிடம், போர்த்துக்கல் போன்ற நாடுகளின் சமய மரபுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உலகப் போக்குத் தீவிரமடைந்து வரும் குறித்து கவலை அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

லிஸ்பன் நகரக் குன்றின் மீது அமைந்துள்ள பிரம்மாண்டமான கிறிஸ்து அரசர் திருவுருவத்தை திருப்பலி நிகழ்த்திய அந்த வளாகத்திலிருந்து நோக்கி அங்கிருந்து ஆசிச் செய்தி வழங்கினார். நற்செய்தி விழுமியங்களின் அடிப்படையில், குறிப்பாக, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகப் பணியாற்றுவதின் அடிப்படையில் சமுதாயத்தைக் கட்டி எழு்புவதற்கு இந்தத் திருவுருவம், கத்தோலிக்கரைத் தூண்டுவதாக என்று கூறினார்.

இத்திருப்பலியை நிறைவுசெய்து விசுவாசிகளை ஆசீர்வதித்து லிஸ்பன் திருப்பீடத் தூதரகம் சென்றார் திருத்தந்தை. அங்கு இரவு உணவருந்தினார். பின்னர் அவ்விடத்து வளாகத்தில் திருத்தந்தைக்கு இரவு வணக்கம் சொல்லக் கூடியிருந்த இளையோரை வாழ்த்தினார். கிறிஸ்து நித்தியத்துக்கும் இளமையாய் இருக்கிறார் என்று சொல்லி இளையோர் தனக்காகச் செபிப்பார்கள் என்பதில் நம்பிக்கையாய் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இத்துடன் திருத்தந்தையின் இந்த 15வது வெளிநாட்டுத் திருப்பயணமாகிய போர்த்துக்கல் நாட்டுக்கானத் திருப்பயணத்தின் முதல் நாளைய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

இந்தத் திருப்பயணத்தின் இரண்டாவது நாளாகிய இப்புதன் காலை உள்ளூர் நேரம் 9.45 மணிக்கு, அதாவது இந்திய நேரம் மதியம் 1.15 மணிக்கு லிஸ்பன் நகரின் பெலெம் கலாச்சார மையத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருப்பீடத் தூதரகத்திலிருந்து 9 கிலோ மீட்டரிலிருக்கின்ற இம்மையம், 1990களில் ஐரோப்பிய பொருளாதார அவையின் மையமாகக் கட்டப்பட்டது. இம்மையத்தி்ல் உலகக் கலாச்சாரத் துறையினரைச் சந்தித்தார். முதலில் போர்த்துக்கல் ஆயர் பேரவையின் கலாச்சார ஆணையத் தலைவர் ஆயர் மானுவேல் கிளமென்ட் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் திருத்தந்தையும் தமது உரையை நிகழ்த்தினார்.

RealAudioMP3 இதனை முடித்து திருப்பீடத் தூதரகம் சென்றார். அங்கு அந்நாட்டின் பிரதமர் ஜோசெ சாக்ரடீஸைச் சந்தித்தார். பகல் 12 மணிக்கு அரைமணி நேரம் இடம் பெற்ற இச்சந்திப்பில் திருத்தந்தையுடன் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நேரடிச் செயலர் பேரருட்திரு Filoni, போர்த்துக்கல்லுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Rino Passigato ஆகியோரும், பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் Luis Amado, ஜனநாயக அமைச்சர், திருப்பீடத்துக்கான போர்த்துக்கல் தூதர் Rochas de Paris ஆகியோரும் கலந்து கொண்டனர். திருச்சபைக்கும் அரசுக்குமிடையேயான உறவு, கத்தோலிக்கக் கல்வியின் முக்கியத்துவம், போர்த்துக்கீசியம் பேசும் அனைவரையும் ஒருங்கிணைப்பது போன்ற தலைப்புகள் இச்சந்திப்பில் இடம் பெற்றன என்று திருப்பீட பேச்சாளர் சேசு சபை அருட்திரு பெடரிக்கோ லொம்பார்தி கூறினார்.

இச்சந்திப்பிற்குப் பின்னர் திருப்பீடத் தூதரகத்தில் மதிய உணவு அருந்தி ஓய்வெடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். மாலையில் லிஸ்பன் சர்வதேச விமானநிலையம் சென்று பாத்திமாவுக்குப் புறப்பட்டார்.

ஜசிந்தா, லூசியா, பிரான்சிஸ் ஆகிய மூன்று இடையர் சிறாருக்கு அன்னைமரி காட்சி கொடுத்த பாத்திமா நகரில் திருத்தந்தை நிகழ்த்தும் நிகழ்வுகளை நாளை இதே நேரத்தில் நீங்கள் கேட்கலாம். மே13, வியாழன் பாத்திமா அன்னை திருவிழா. இவ்வன்னை அனைவரது வாழ்விலும் அன்பையும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவாராக







All the contents on this site are copyrighted ©.