2010-05-11 16:58:06

பிரேசில் அரசுத் தலைவருக்கு, பசியை அகற்றுவதில் உலக சாதனையாளர் விருது


மே11,2010 பிரேசில் நாட்டில் பசியைப் போக்குவதற்கு அந்நாட்டு அரசுத் தலைவர் Luiz Inacio Lula da Silva செய்து வரும் செயல்களைப் பாராட்டி ஐ.நா.வின் இரண்டு அமைப்புகள் அவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன.

WFP என்ற ஐ.நா.வின் உலக உணவுதிட்ட அமைப்பும், FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பும் பசியை அகற்றுவதில் உலக சாதனையாளர் என்ற விருதை பிரேசில் அரசுதத்லைவர் லூலாவுக்கு இத்திங்களன்று வழங்கியுள்ளன.

பிரேசில் அரசுத்தலைவர் லூலா எடுத்த முயற்சிகளின் பயனாக, அந்நாட்டில் தற்சமயம், 93 விழுக்காட்டுச் சிறாரும் 82 விழுக்காட்டு வயது வந்தோரும் ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சாப்பிடுகின்றனர் என்று உலக உணவுதிட்ட அமைப்பின் இயக்குனர் Jossette Sheeran விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவரைப் பாராட்டினார்.

2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியோடு அரசுத்தலைவர் பணியின் இரண்டு பதவிக்காலங்களை முடிக்கவிருக்கிறார் லூலா.

இந்த விருதை இதற்கு முந்தைய ஆண்டுகளில், ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான், தற்போதைய ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூன், சவுதி அரேபியா அரசர் அப்துல்லா போன்றோர் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.