2010-05-11 16:54:33

திருத்தந்தையின் போர்த்துக்கல் நாட்டுக்கானத் திருப்பயணம்


மே11,2010 மனித சமுதாயத்தை வடிவமைத்துள்ள, நம்பிக்கையின் ஊற்றாம் நற்செய்தி உண்மைகளை நமக்கு நினைவுபடுத்துவதற்காக கன்னிமரி விண்ணிலிருந்து வந்தார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இச்செவ்வாய் உரோம் நேரம் காலை 8.50 மணிக்கு போர்த்துக்கல் நாட்டுக்கான தமது முதல் திருப்பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை, போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பன் விமான நிலையத்தில் இடம் பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

தனது சகோதரர்களின் இறையரசு பயணத்தில் அவர்களை அதில் உறுதிப்படுத்துவதற்கு, பாத்திமாவின் ஒரு திருப்பயணியாக வந்துள்ளேன் என்றுரைத்த திருத்தந்தை, 93 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற பாத்திமா அன்னை காட்சிகள் பற்றிக் குறிப்பிட்டு, அன்று விண்ணகமே போர்த்துக்கல் மீது நம்பிக்கையின் ஜன்னல் போன்று திறந்திருந்தது என்று கூறினார்.

மனிதன் தனது கதவுகளைக் கடவுளுக்கு மூடும் பொழுது கடவுள் அதனைத் திறந்து, ஒரே வானகத் தந்தையை ஏற்பதில் அடிப்படையைக் கொண்ட சகோதரத்துவ தோழமையை மனிதக் குடும்பத்துக்குள் ஏற்படுத்துகின்றார் என்றும் கூறினார் அவர்.

இது திருத்தந்தையையோ அல்லது எந்த திருச்சபை அதிகாரத்தையோ சார்ந்து இல்லை என்றும் திருச்சபை பாத்திமா மீது அல்ல, பாத்திமாவே திருச்சபை மீது பொறுப்புக்களை ஒப்படைத்தது என்றும் உரைத்த வணக்கத்துக்குரிய கர்தினால் மானுவேல் செரெஜெய்ராவின் கூற்றையும் நினைவுபடுத்தினார் அவர்.

பாத்திமாவில் அன்னைமரியைக் காட்சியில் கண்ட, ஜசிந்தாவும் பிரான்சிசும் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டதன் பத்தாம் ஆண்டைச் சிறப்பிப்பதற்காக, நம்பிக்கையின் அடிப்படையில், தான் தொடங்கியிருக்கும் இத்திருப்பயணம், ஞானத்தையும் மறைப்பணியையும் பரிந்துரைக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.

தனக்கு இனிய வரவேற்பளித்த போர்த்துக்கல் அரசுத்தலைவருக்கும் அந்நாட்டின் அனைத்து மதத்தினருக்கும் தமது நன்றியைத் தெரிவித்தார் அவர்.

இச்செவ்வாய் ஏர்பஸ்320 ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்பட்ட திருத்தந்தை, மூன்று மணி 10 நிமிடங்கள் பயணம் செய்து தலைநகர் லிஸ்பனை உள்ளூர் நேரம் முற்பகல் 11 மணிக்குச் சென்றடைந்தார். அப்பொழுது இந்திய நேரம் செவ்வாய் மாலை 3மணி 30 நிமிடங்களாகும்.

லிஸ்பன் சர்வதேச விமானத்தளத்தில் போர்த்துக்கல் அரசுத் தலைவர் Anibal Cavaco Silva, லிஸ்பன் பிதாப்பிதா கர்தினால் Jose da Cruz Policarp உட்பட பல அரசு மற்றும் திருச்சபை பிரமுகர்கள் திருத்தந்தையை வரவேற்றனர்.

அங்கு திருத்தந்தை ஆற்றிய உரையில், அக்காலத்தில் போர்த்துக்கல் மக்கள் ஒரு நாட்டினராக வாழ்வதற்கான அங்கீகாரத்தைப் புனித பேதுருவின் வழிவருபவரிடம் எதிர்பார்த்தார்கள், நற்செய்திப் பணிக்கு நீண்டகாலமாகச் சிறப்பான சேவையாற்றும் மிகவும் விசுவாசமுள்ள நாடு என்று அப்போதைய திருத்தந்தை அரசர் முன்னிலையில் அந்நாட்டினரைப் பாராட்டி அவர்களின் ஆவலை நிறைவேற்றினார் அது நடந்து 93 ஆண்டுகள் ஆகியிருப்பதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

போர்த்துக்கல்லில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற, திருச்சபையையும் அரசையும் பிரித்துப் பார்க்கும் ஜனநாயகப் புரட்சி குறித்தும் குறிப்பிட்ட திருத்தந்தை, 1940 மற்றும் 2004ம் ஆண்டுகளில் இடம் பெற்ற இரண்டு ஒப்பந்தங்கள், திருச்சபையின் சுதந்திரத்துக்கான புதிய சகாப்தத்தைத் திறந்து வைத்துள்ளன என்றும் கூறினார்.

லிஸ்பன் சர்வதேச விமானநிலையத்தில் இடம் பெற்ற வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, லிஸ்பன் திருப்பீடத் தூதரகத்திற்குத் திறந்த காரில் சென்று சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் அரசுத்தலைவர் மாளிகை சென்று அவரைச் சந்தித்தார் திருத்தந்தை. அவர் காரில் சென்ற போது ஏராளமான மக்கள் சாலைகளின் இருபக்கங்களிலும் நின்று ஆரவாரத்துடன் கைகளை ஆட்டி அசைத்து அவரை வரவேற்றதைக் காண முடிந்தது.

இச்செவ்வாய் மாலை லிஸ்பன் பூங்காவில் திருப்பலி நிகழ்த்துதல், கிறிஸ்து அரசர் திருத்தலத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு செய்தி வழங்குதல் திருத்தந்தையின் இந்நாளையப் பயணத் திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் மற்றும் பாத்திமா நகரங்களுக்கான இந்த நான்கு நாள் திருப்பயணத்தை நிறைவு செய்து இவ்வெள்ளி மாலை வத்திக்கான் திரும்புவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.