2010-05-10 16:44:01

வடகொரிய ஆயர்கள் இருக்குமிடம் தெரியவில்லை


மே10,2010 உலகில் உண்மையான ஸ்டாலினிச ஆட்சி நடைபெறும் வடகொரிய கம்யூனிச நாட்டில் கத்தோலிக்க ஆயர்கள் காணாமற்போயுள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆயர்களின் நிலை குறித்து கேட்கப்பட்ட விபரங்களுக்கு 1980களிலிருந்து எந்த ஓர் அதிகாரியும் பதில் அளிக்கவில்லை என்று ஆசியச் செய்தி நிறுவனம் குறை கூறியது.

கத்தோலிக்கப் புவியியல் அமைப்பின்படி வடகொரியா, Pyongyang, Hamhung, Chunchon ஆகிய மூன்று மறைமாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. Tomwok பகுதி மட்டும் நேரிடையாகத் திருப்பீடத்தின்கீழ் உள்ளது.

கடந்த நூற்றாண்டின் பாதியில் தலைநகர் Pyongyang மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் கத்தோலிக்கராக இருந்தனர். ஆனால் அந்த நூற்றாண்டின் இறுதியில் அது ஒரு விழுக்காடானது. 1950க்கும் 1953க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற கொரியச் சண்டையில் கம்யூனிசப் படைகள் தென்பகுதியில் அத்துமீறி நுழைந்து மறைபோதகர்களையும், வெளிநாட்டு துறவிகளையும், கொரியக் கிறிஸ்தவர்களையும் வேட்டையாடின. வடகொரிய அரசு, வடக்கில் துறவு மடங்களையும் ஆலயங்களையும் அழித்தது. துறவிகளையும் குருக்களையும் கைது செய்து மரண தண்டனைக்கு உட்படுத்தியது என்று சொல்லப்படுகிறது.

கொரியாவில் உள்நாட்டுச் சண்டை முடிந்த 1953ம் ஆண்டுக்குப் பின்னர், அந்தத் தீபகற்பம் வடக்கு மற்றும் தெற்கு எனப் பிரிந்தது.








All the contents on this site are copyrighted ©.