2010-05-10 16:34:38

போர்த்துக்கல் திருப்பயணத்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்


மே10,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இச்செவ்வாய்க்கிழமை தொடங்கும் போர்த்துக்கல் நாட்டுக்கான தமது திருப்பயணத்திற்காகச் செபிக்குமாறு இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டார்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஏறக்குறைய இருபதாயிரம் திருப்பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, இந்த மே 11 முதல் 14 வரை போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் மற்றும் பாத்திமா நகரங்களுக்குத் தான் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்துப் பேசினார்.

ஜசிந்தா, பிரான்சிஸ் ஆகிய இரண்டு சிறிய இடையர்கள் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டதன் பத்தாம் ஆண்டைச் சிறப்பிப்பதுவே பாத்திமாவுக்கானத் தனது திருப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.

வணக்கத்துக்குரிய திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மனதுக்கு மிகவும் பிடித்த இந்த பாத்திமா மாதா திருத்தலத்திற்குப் புனித பேதுருவின் வழிவருபவர் என்ற முறையில் முதன்முறையாகச் செல்வதாகவும் உரைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அப்பயணத்தில் அனைவரும் செபத்துடன் தன்னோடு பயணம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

மே மாதத்தை அன்னைமரிக்கு அர்ப்பணிப்பது திருச்சபையில் மரபுவழி வழக்கமாக இருக்கின்றதென்றும், கடவுளின் படைப்பில் மிக அழகான மலராக மலர்ந்தவர் மரியாளே என்றும் திருத்தந்தை விசுவாசிகளிடம் கூறினார்.

கடவுள் தம் மகனை இவ்வுலகுக்கு அனுப்பிய அந்த நிறைவான காலத்தில் ரோஜாவாகிய மரியென்னும் மலர் உலகில் தோன்றியது, அத்துடன் உலகுக்கு புதிய வசந்தத்தைக் கொடுத்தது என்றுரைத்த அவர், கிறிஸ்தவர்களுக்கு மரியா இயேசுவின் முதலும் நிறைவுமான சீடத்தியாக இருக்கிறாள் என்றார்.

இஞ்ஞாயிறு நற்செய்தி பற்றியும் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இதில் கிறிஸ்து தூயஆவி பற்றிப் பேசுகிறார், இவ்வேளையில் தூய ஆவியின் ஆலயமாகிய மரியாவை நாம் எப்படி நினைக்காமல் இருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை.

இன்னும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மேற்கொள்ளவிருக்கின்ற போர்த்துக்கல் நாட்டுக்கானத் திருப்பயணத்தில் எல்லாரும் உயிரூட்டமுடன் கலந்து கொள்ளுமாறு போர்த்துக்கல் நாட்டுப் பிதாப்பிதா கர்தினால் ஜோஸ் பொலிகார்ப்பு அழைப்பு விடுத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.