2010-05-07 16:21:57

நோயாளியின் ஆன்மீக மற்றும் மதம் சார்ந்த தேவைகளுக்கு உதவுவது திருச்சபையின் கடமை - திருப்பீட நலவாழ்வு அவைத் தலைவர்


மே07,2010 ஒவ்வொரு நோயாளியின் ஆன்மீக மற்றும் மதம் சார்ந்த தேவைகளுக்கு உதவுவதும் நோயாளியின் அடிப்படை உரிமையை மதித்துக் காப்பதும் திருச்சபையின் கடமையாக இருக்கின்றது என்று திருப்பீட நலவாழ்வு அவைத் தலைவர் பேராயர் ஜிக்மெண்ட் ஜிமோவ்ஸ்கி (Zygmunt Zimowski) கேட்டுக் கொண்டார்.

பிரான்ஸ் நாட்டு லூர்து நகரில் இவ்வியாழனன்று தொடங்கிய, 23வது உலக கத்தோலிக்க மருத்துவ கழக மாநாட்டில் உரையாற்றிய பேராயர் ஜிமோவ்ஸ்கி, 1995ம் ஆண்டில் இந்தத் திருப்பீடத்துறை நலவாழ்வுப் பணியாளருக்கென வகுத்த ஒழுங்குமுறைகளையும் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு நலவாழ்வுப் பணியாளரும், முதலில் அவர்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தியதோடு, அவர்கள், மனித வாழ்வைப் பாதுகாப்பவர்களாக இருக்குமாறும் பேராயர் Zimowski வலியுறுத்தினார்.

நலவாழ்வுப் பணியாளர்கள், உடல், உள்ளம் ஆன்மீகம் ஆகிய இவை மூன்றையும் ஒருங்கிணைத்து வாழ்கின்றவர்களாக இருக்க வேண்டுமென்று அவர் கூறினார்.

லூர்து நகரில் நடைபெறும் இந்த உலக கத்தோலிக்க மருத்துவத் துறையினரின் மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

திருப்பீட நலவாழ்வு அவை அது நிறுவப்பட்டதன் 25ம் ஆண்டை இவ்வாண்டில் சிறப்பிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.