2010-05-05 17:39:03

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்


மே05,2010 இந்நாட்களில் இத்தாலியின் பல பாகங்களில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. அதன் தாக்கம் தலைநகரிலும் நன்றாகவே தெரிகிறது. இப்புதன் காலை உரோமை மாநகரில் வானம் சற்று மந்தாரமாகவே இருந்தது. வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கானப் பயணிகளுக்கு மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை, அவர் இஞ்ஞாயிறன்று மேற்கொண்ட தூரின் நகருக்கானத் திருப்பயணம் குறித்து விளக்கினார்.

RealAudioMP3 அன்புச் சகோதர சகோதரிகளே, தூரின் நகருக்கான எனது அண்மைத் திருப்பயணத்தில் கிறிஸ்துவின் புனிதச் சவப்போர்வை முன்பாகச் செபித்தேன். இந்தப் புனிதத் துணியானது, கிறிஸ்துவின் திருமுகத்தைத் தியானிக்கவும், அவரின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் பேருண்மையை உருக்கமாக எண்ணிப் பார்க்கவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் மறையுடலாம் திருச்சபையின் உறுப்பினர்கள் என்ற விதத்தில், திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அவரின் மீட்புப் பணியில் பங்கு கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எனினும், அருட்பணியாளர்கள் ஆண்டின் இந்த இறுதிக் கட்டத்தில், அருட்பணியாளரின் குறிப்பிட்ட பணி குறித்து, சிறப்பாக இன்று அருட்பணியாளர் திருப்பணியின் திருநிலை குறித்துப் பேச விரும்புகிறேன் என்றார் திருத்தந்தை.

RealAudioMP3 நாம் அறிந்திருப்பது போல, தூய்மை கடவுளுக்கு மட்டும் உரியது. அவரே உண்மை, நன்மைத்தனம் அன்பு மற்றும் அழகின் முழுமையாய் இருக்கிறார். கிறிஸ்துவின் பணியாளர்கள் என்ற முறையில், அருட்பணியாளர்கள், கடவுளின் தூய்மையின் பேருண்மையோடு வாழ்வை வழங்கும் தொடர்புக்குள் நம்மைக் கொண்டு செல்கின்றனர். அருட்பணியாளர்கள்களின் நற்செய்திப் போதனைக்கும் அவர்கள் திருவருட்சாதனக் கொண்டாட்டங்களை நிகழ்த்துவதற்கும் நன்றி சொல்லும் அதேவேளை, இவற்றின் மூலம் நாம் கடவுளை அணுகவும் இறையுருவில் மெது மெதுவாக மாறவும் முடிகின்றது. திருவருட்சாதனக் கொண்டாட்டங்களில் குறிப்பாக, திருநற்கருணை மற்றும் ஒப்புரவு அருட்சாதனங்களில் கிறிஸ்துவின் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து, பிரசன்னமாக இருக்கவும் உறுதியுடன் செயல்படவும் செய்யப்படுகின்றன. அருட்பணியாளர் பக்தியுடன் நிகழ்த்தும் இந்த திருவருட்சாதனஙங்களில் அவர்கள் விசுவாசிகளைத் தூய்மைப்படுத்துகின்றனர், அவர்களும் தூய்மைப்படுத்தப்படுகின்றனர் மற்றும் கிறிஸ்துவுக்கு மிக நெருக்கமாக அவராக மாறுகின்றனர்.

இவ்வாறு புதன் மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை, இதில் பங்கு கொண்ட அனைவரும் அருட்பணியாளர்களுக்காவும் அவர்களது தூய்மைப்படுத்தும் பணிக்காகவும் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதன்மூலம் இவர்கள் கடவுளின் இதயத்துக்கு ஒத்த உண்மையான மேய்ப்பர்களாக இருப்பார்கள் என்றார். பின்னர், அனைவரையும் வாழ்த்தி தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.