2010-05-04 15:57:12

வாழ்வுக்கான இருவழிகள் - திருப்பா ஒன்று


மே04,2010 ஒ RealAudioMP3 ருசில நாட்களுக்கு முன்னர் நேர்காணல் நிகழ்ச்சிக்காக வேளாங்கண்ணியில் இருக்கும் ஓர் அருட்பணியாளருக்கு உரோமையிலிருந்து அவரது செல்லிட தொலை பேசிக்கு அழைத்தேன். ஒரு ரிங் சத்தம் கேட்டவுடன் சங்கீத வசனங்களை அந்த அருட்பணியாளர் சொல்லிக் கொண்டிருந்தார். ஆண்டவர் உனக்கு ஆசீர் பொழிவாராக. அவர் நீ போகும்போதும் காக்கிறார், வரும்போதும் காக்கிறார், இருளின் பயத்துக்கு நீ அஞ்ச வேண்டியதில்லை - இவ்வாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. என்னது, இவ்வளவு தூரத்திலிருந்து அழைக்கிறோம். அது தெரியாமல் இவர் இந்த திருவசனங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே என்று தொலைபேசியைத் துண்டித்து விட்டேன். பின்னர் ஓர் அரைமணிநேரம் கழித்து மீண்டும் எடுத்தேன். ஏனெனில் எனது தேவை அப்படி. அப்பொழுதும் இதே வசனங்கள் தொடங்கின. ஆனால் நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் அந்த அருட்பணியாளர் ஹலோ சொல்லிவிட்டார். என்ன சாமி, வெறும் சங்கீத வசனங்களாகக் கேட்கிறதே என்று கேட்டேன். அதற்கு அவர், ஆமாம், தொலைபேசியை எடுப்பவர்கள் ஆறுதலும் நம்பிக்கையும் தரும் இந்த வசனங்களைக் கேட்கட்டுமே என்று நான்தான் வாசித்து வைத்துள்ளேன் என்றார். இந்த அருட்பணியாளர் மட்டுமல்ல, இன்னும் பலர் தங்களது செல்லிட பேசியில், என் கிருபை உனக்கு என்றும் இருக்கிறது, நீ பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன் போன்ற சங்கீத வசனங்களை முகப்பிலும் வைத்துள்ளனர். இவர்கள் அவர்களது செல்லிட பேசியை எப்பொழுது எடுத்தாலும் இந்த வசனங்கள்தான் முதலில் அவர்கள் கண்களில் படும். இந்த அளவுக்கு சங்கீத வசனங்கள் கிறிஸ்தவர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. விவிலிய புத்தகத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் 150 திருப்பாடல்கள் அல்லது திருப்பாக்கள் பழைய விவிலிய மொழி பெயர்ப்பில் சங்கீதங்கள் என்று இருந்தன. இந்த நமது நிகழ்ச்சியில் இவற்றைத் திருப்பாக்கள் என்றே சொல்வோம்.

விவிலியத்திலுள்ள திருப்பாக்கள் தொகுதி, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல், யூத சமூகத்திற்கும் செபப் புத்தகமாகவே அமைந்துள்ளது. யூதர்கள் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை எருசலேமை நோக்கிச் செபித்ததாக விவிலியத்தில் குறிப்புகள் உள்ளன. இவ்வாறு செபிக்கும் போது அவர்கள் திருப்பாக்களையே பயன்படுத்தியுள்ளனர். அவர்களது பொது வழிபாடுகளிலும் இவை வழக்கில் இருந்துள்ளன. ஒருயூதப் பெருமகனார் சொல்கிறார் – “இந்தப் புத்தகம் எங்கள் வாழ்விலே இரண்டறக் கலந்து விட்டது. இது 150 பாக்களைக் கொண்ட ஒரு சிறிய புத்தகமாக இருப்பினும் எங்களின் சாவுக்கும் வாழ்வுக்குமிடையே அமைந்த 150 படிகள், எங்களின் கடவுள் பற்றுறுதி, இறைமறுப்பு, துயரங்கள், உயிர்ப்புகள் ஆகியவற்றைப் படமெடுத்துக்காட்டும் 150 கண்ணாடித் துண்டுகள்” என்கிறார். ஆம். மத, இன வேறுபாடின்றி யாரும் இந்தத் திருப்பாக்களை வாசிக்கலாம். வானொலி நேயர்களே நீங்களும் வாசிக்கலாம். அப்படி வாசிக்கும் போது இது ஏதோ உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்தது போன்ற உணர்வு ஏற்படும். மனித அனுபவங்களை, மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இன்ப, துன்ப உணர்வுகளை, எண்ணங்களை, ஆர்வங்களை, நன்றியுணர்வுகளை, உள்ளத்து ஏக்கங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போன்ற உணர்வு உருவாகும்.

இந்த 150 திருப்பாக்களையும் படிப்பதற்கும் செபிப்பதற்கும் உதவும் வகையில் கருத்து அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர் விவிலிய அறிஞர்கள். இறைபுகழ் திருப்பாக்கள், புலம்பற் பாடல்கள், நம்பிக்கைப் பாடல்கள், செய்ந்நன்றிப் பாடல்கள், அரச திருப்பாக்கள், அறிவுரை வழங்கும் திருப்பாக்கள் எனப் பிரித்துள்ளனர். இன்று திருப்பா ஒன்றை வாசிப்போம். இந்த முதல் பாடல் அறிவுரை வழங்குவதாக அமைந்துள்ளது.

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்: பாவிகளின் தீயவழி நில்லாதவர்: இகழ்வாரின் குழுவினில் அமராதவர்: 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்: அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்:3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்: பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்: தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை: அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.5 பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்: பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார்.6 நேர்மையாளரின் நெறியை ஆணடவர் கருத்தில் கொள்வார்: பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.

இந்தப் பாடல், மற்ற அனைத்துப் பாடல்களுக்கும் நுழைவாயில் போன்று, முன்னுரை போன்று அமைந்துள்ளது. மற்ற திருப்பாக்கள் அனைத்திலும் தொடர்ந்து எதிரொலிக்கும் இரண்டு கருத்துக்களை இது தொட்டுள்ளது. அதாவது, நல்லவர்களுக்குக் கிடைக்கும் பேற்றையும் தீயவர்களுக்கு கிடைக்கும் துயரத்தையும் அறிவிக்கிறது. பொதுவாக மனிதனின் ஆன்மீக வாழ்வு இரண்டு நிலைகளைக் கொண்டது. நல்லது அல்லது தீயது. எனவே இதில் இரண்டு வழிகள் நமக்குத் திறந்து வைக்கப்படுகின்றன. ஒரு வழியில் கிடைப்பது மகிழ்ச்சி, அடுத்த வழியில் கிடைப்பது துயரம். யாருமே அழுது கொண்டிருக்க விரும்புவதில்லை. ஒருநாள் நானும் மற்றொரு சகோதரியும் நகரப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்தச் சகோதரி ஓட்டுனர் அருகில் நின்று எதனையோ யோசித்துக் கொண்டு கொண்டிருந்தார். அப்பொழுது அந்த ஓட்டுனர், அச்சகோதரியிடம், கொஞ்சம் சிரியுங்களேன் என்றார். ஆம். எல்லாருமே சிரித்த முகத்தைப் பார்க்க விரும்புகிறோம். அப்படியே வாழவும் ஆசைப்படுகிறோம். அப்படியானால் இந்த மகிழ்ச்சி கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? அதைத்தான் திருப்பா ஒன்று சொல்கிறது.

பொல்லார், பாவிகள், இகழ்வார் ஆகிய இவர்கள் குழுவில் சேரக்கூடாது. இந்தக் குழுவில் இணையாமல் வாழ்கிறவர்கள், இறைவனின் கட்டளைகளில் மகிழ்ச்சியடைவார்கள். அவரது சட்டங்களை, அவரது வார்த்தைகளை இரவும் பகலும் தியானிப்பார்கள். இறைவன் மனிதனுக்கென வகுத்துத் தந்துள்ள வாழ்க்கை நெறிகளை, இடைவிடாது பற்றுறுதியுடன், தியானிப்பார்கள். சோதனைகள் வேதனைகள் நோய்கள் அவமானம், படுதோல்வி, துன்பங்கள் இவை வந்து விட்டால் தியானிப்பதை உடனே நிறுத்திவிட மாட்டார்கள். வேத நூல்களில் சொல்லப்பட்டிருப்பவைகளைத் எல்லா வேளைகளிலும் வாசித்து செபிப்பார்கள். தியானிப்பதோடு நில்லாமல் அதன்படியும் வாழ முற்படுவார்கள். இப்படி வாழ்கின்றவர் எப்படி இருப்பார் என்றும் இந்தத் திருப்பாடல் சொல்கிறது.



இவர், நீரோடை அருகில் நடப்பட்ட மரம் போல் உறுதியாக செழுமையாக இருப்பார். வேர்களுக்கு நல்ல நீர்ஆதாரமும் உரங்களும் கிடைக்கும் மரங்கள் பசுமையாக தளதளவென்று எப்பொழுதும் இருக்கும். குளிர்காலத்தில்கூட இலைகளை உதிர்த்துவிடாது. எப்பொழுதும் வசந்தமே அதன் வாழ்க்கையில் இருக்கும். இராமலிங்க அடிகளாரும், கோடையில் இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே, தருநிழல் கனியே என்று பாடுகிறார். கடவுளின் வார்த்தைகளின்படி நடப்பவர்கள், சுனாமியால்கூட அடித்துச் செல்லாத கற்பாறையின் மீது கட்டப்பட்ட வீடு போன்று உறுதியாக இருப்பார்கள். மாறாக, தீயவழியில் நடப்பவர்கள் மணல்மீது கட்டப்பட்ட வீடு போன்றவர்கள். இலேசான காற்றினால்கூட அடித்துச் செல்லப்படும் சறுகு போன்றவர்கள்.

நல்லது செய்தால் நன்மை விளையும் என்பது உண்மைதானே. மலர்க்கற்களை வீசினால் அவை பூமாலையாகத்தான் கழுத்தில் வந்து விழும். மாறாக முள்கற்களை வீசினால் காயங்களாகத்தானே திரும்பி வரும். ஆம். தீயது செய்தால் தீமைதான் விளையும். அல்லது செய்தால் அல்லதுதான் விளையும். ஒரே காட்டுக்குச் சென்று திரும்பும் எல்லாருமே வண்ண மலர்களையும், பழங்களையும் கொண்டு வருவதில்லை. சிலர் கையில் சுள்ளிகள், வேறொருவர் கையில் முட்புதர்கள், இன்னொருவர் கையில் பறவைகள் இப்படி பலபொருட்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் பார்வை, பண்புகள் போன்று அவர்கள் சேகரிக்கும் பொருட்களும் இருக்கின்றன.

அன்பர்களே, நிச்சயமாக நீங்கள் அந்தக் காட்டில் வாசனைப் பூக்களையும், சுவைதரும் நற்கனிகளையும் அள்ளி வந்திருப்பீர்கள். திருப்பா ஒன்று சொல்லும் நற்பேறு பெற்றவர் குழுவில் சேரத்தான் விரும்புவீர்கள். கிறிஸ்து இயேசு காட்டும் வழி வாழ்வுக்குச் செல்லும் வழியாகும். அவரே அந்த வழியாவார். அவரது போதனைகளே அந்த வழியாகும். நம் மனித வாழ்க்கையானது, சாவுக்கும் வாழ்வுக்கும், இருளுக்கும் ஒளிக்கும், நன்மைக்கும் தீமைக்கும், நீதிக்கும் அநீதிக்கும், அறத்திற்கும் மறத்திற்கும் இடையே நடக்கின்ற தொடர் போராட்டம். மனித வாழ்க்கை இந்த இரண்டு கோணங்களில்தான் கணிக்கப்படுகின்றது. இப்படிச் சொல்லும் போது அந்தத் திரைப்பட பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. “வாழ்வென்றால் போராடும் போர்க்களம் என்று ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது. இரவானால் பகலொன்று வந்திடுமே என்று ஒவ்வொரு விடியலுமே சொல்கிறது. உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும். மலையோ அது பனியோ? நீ மோதிவிடு! காலப் போக்கில் காயமெல்லாம் மாயங்களாக மறைந்து போகும். ஆயினும் நம்பிக்கை வேண்டும் வாழ்வில், இலட்சியம் நிச்சயம் ஒரு நாளில் வெல்லும்! எதிலும் தெளிவிருந்தால் அந்த வானமே வசமாகும்!” நேயர்களே, இதற்கு கடவுளது திருச்சட்டங்கள், அவரது திருச்சொற்கள் நமக்கு வழியும் ஒளியுமாக இருக்கின்றன.

இந்த வாரம் முழுவதும் திருப்பா ஒன்றின் இந்த வசனத்தைச் சிந்திப்போம். அடிக்கடி சொல்வோம்.

“நேர்மையாளரின் நெறியை ஆணடவர் கருத்தில் கொள்வார்”








All the contents on this site are copyrighted ©.