2010-05-04 16:02:59

இந்திய புதிய கல்விச்சட்டம் சிறுபான்மையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது


மே04,2010 இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு இலவச கட்டாய கல்வி வழங்க வலியுறுத்தும் புதிய சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை தனது கவலையை தெரிவித்துள்ளது.

எல்லாருக்கும் கல்வி பெறுவதற்கு உரிமை என்ற விதிமுறையை அனுமதித்திருப்பதன் வழியாக எல்லாருக்கும் கல்வி வழங்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டும் அதேவேளை, இந்த விதிமுறையின் சில பிரிவுகள் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அமைப்பு உரிமைகளை மீறுவதாக இருக்கின்றன என்று இந்திய ஆயர் பேரவையின் கல்வி ஆணையத் தலைவர் ஆயர் Joshua Mar Ignathios நிருபர் கூட்டத்தில் இத்திங்களன்று கூறினார்.

இந்த ஏப்ரலில் அமலுக்கு வந்த புதிய சட்டத்தின்படி, ஆரம்பக்கல்வியை முடிக்கும் வரை எந்த ஒரு குழந்தையும் பள்ளியைவிட்டு நீக்கப்படக்கூடாது, அவர்கள் பள்ளித் தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்ற தேவையில்லை. இச்சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி பெறுவதற்கு இருக்கும் அடிப்படை உரிமையை சட்டமாக்கியுள்ள 135 நாடுகளுள் இந்தியாவும் இணைந்துள்ளது.

எனினும் இப்புதிய சட்டத்தின் 21,22 ஆம் பிரிவுகளில், சிறுபான்மை குழுக்கள் தங்களது கல்வி நிறுவனங்களை தாங்களே நிர்வகிக்கும் உரிமைகள் நீக்கப்பட்டுள்ளன என்று ஆயர் இக்நாத்தியோஸ் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.