2010-05-03 16:31:15

மரணம் குறித்த பயமானது பலரை நம்பிக்கையிழக்கச் செய்கின்றது - திருத்தந்தை


மே03,2010 மரணம் குறித்த பயமானது பலரை வாழ்க்கையில் நம்பிக்கையிழக்கச் செய்கின்றது மற்றும் அழிந்து போகும் மாயைகளில் ஆறுதலைத் தேட வைக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இத்திங்களன்று கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் இத்திங்கள் முற்பகலில் இடம் பெற்ற கர்தினால் பவுல் அகுஸ்தீன் மேயெரின் அடக்கச் சடங்குத் திருப்பலியின் இறுதியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இத்தகைய போக்கை இக்காலத்தில் அதிகம் காணமுடிகின்றது என்றார்.

இறைவனில் இறக்கும் ஒவ்வொரு மனிதனும் கடவுளின் இணையற்ற அன்பின் செயலில் விசுவாசத்தால் பங்கு கொள்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

விசுவாசம் நம்மை ஏமாற்றாது, ஏனெனில் கடவுளின் அன்பு தூய ஆவியில் நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை, கடவுளில் நம்பிக்கை வைத்துள்ள கிறிஸ்தவர்கள் மரணத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.

நமது வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் கடவுளின் கரங்களில் குறிப்பாக, மரண நேரத்தில் கடவுளின் கரங்களில் இருக்கின்றது, எனவே இயேசு சிலுவையில் செபித்த நம்பிக்கையான செபத்தோடு நம் சகோதரர் பவுல் அகுஸ்தீனின் இறுதிப் பயணத்தில் பங்கு கொள்வோம் என்றார் அவர்.

1911ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த கர்தினால் பவுல் அகுஸ்தீன் மேயெர், 1931ல் பெனடிக்ட் துறவு சபையில் வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தார். 1935ல் குருவானார். 1971ல் துறவிகள் பேராயத்தின் செயலராகப் பணியைத் தொடங்கினார். 1985ல் திருவருட்சாதனப் பேராயத் தலைவராகவும், 1988ல் எக்ளேசியா தேய் என்ற பாப்பிறை அவையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஏப்ரல்30, 2010ல் இறைபதம் அடைந்தார்.








All the contents on this site are copyrighted ©.