2010-05-02 16:05:04

திருத்தந்தையின் தூரின் நகருக்கானத் திருப்பயண விளக்கம்


மே02,2010 “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்றார் இயேசு. இந்த இயேசுவின் இறந்த திருஉடலை போர்த்தியிருந்த சவப்போர்வையாக நம்பப்படும் திருத்துணி வட இத்தாலிய நகரமான தூரின் பேராலயத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. 4.3 மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமுமான இந்தச் சவப்போர்வை, குண்டு துளைக்காத, வெப்பநிலையால் பாதிக்கப்படாத தகதகப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இது சிலுவைப் போர் வீரர்களால் புனித பூமியிலிருந்து எடுத்துவரப்பட்டது. பிரான்சில் வைக்கப்பட்டிருந்த இதனைப் பின்னர் 1578ம் ஆண்டிலிருந்து இத்தாலிய சவோய் அரச குடும்பம் பாதுகாத்து வந்தது. இத்தாலிய முன்னாள் அரசர் 2ம் உம்பெர்த்தோ 1983ல் இதனைத் திருத்தந்தையிடம் ஒப்படைத்தார். தற்போது தூரின் பேராலயத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளதும் வத்திக்கானுக்குச் சொந்தமுமான இந்தப் புனிதத் துணி பொது மக்களின் பார்வைக்கென இந்த ஏப்ரல் 10ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இது இந்த மே மாதம் 23ம் தேதி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்தத் திருத்துணியை இதுவரை சுமார் 20 இலடசம் பேர் பார்வையிட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இந்தப் புனிதத் துணியைப் பார்வையிடுவதற்காக தூரின் நகருக்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

இதற்குமுன்னர் 1998லும் பின்னர் இரண்டாயிரமாம் ஜூபிலி ஆண்டிலும் திறந்து வைக்கப்பட்டது. 1532ம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பழுதான போது அதனை ப்ரெஞ்ச் அருட்கன்னியர் தையல்கள், ஒட்டுத்துணிகள் போட்டு பழுதுபார்த்து பத்திரமாக பாதுகாத்து வந்தனர். 2002ம் ஆண்டில் இந்தத் தையல்கள், ஒட்டுத்துணிகள் அகற்றப்பட்டன. அதன் பின்னர் தற்சமயம் இந்தப் புனிதத் , புதுப்பிக்கப்பட்ட பின்னர் தற்சமயம் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் துணியின் வலது பக்கத்தில் ஒரு சிறிய பகுதி அகற்றப்பட்டிருப்பது தெரியும். காரணம், 1988ம் ஆண்டில் இந்தச் சிறிய பகுதி வெட்டப்ப்டடு ரேடியோ கார்பன் பரிசோதனைக்காக நான்கு பல்வேறு பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டது.

இஞ்ஞாயிறு காலை தூரின் நகர் சான் கார்லோ வளாகத்தில் கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் குருக்களுடன் கூட்டுத்திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை.

தூரின் நகர மேயர், பல அரசு அதிகாரிகள் உட்பட ஏறக்குறைய 25,000 விசுவாசிகள் கலந்து கொண்ட இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில் கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்பை மையமாக வைத்துப் பேசினார். கிறிஸ்துவின் மகிமை அவரது இறப்போடு தொடங்கியது. கிறிஸ்து தமது வாழ்வை மனித சமுதாயத்திற்கு வழங்கியதன் வழியாக அவர்களை அன்பு செய்தார் என்றார்.

திருத்தந்தை ஆற்றிய இந்த மறையுரையில், இயேசு புதிய கட்டளை பற்றிப் பேசுகிறார். இயேசு நம்மை அன்பு செய்தது போல் நாமும் ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும் என்பதே இதிலுள்ள புதினம். அனைத்து எதிர்நிலைச் சூழல்களையும் தடைகளையும் வாய்ப்புக்களாக மாற்றுவதே அதன் வரையறையற்ற அன்பின், சிறப்பாகும். கடந்த நூற்றாண்டுகளில் தூரின் திருச்சபை வளமான புனிதத்துவத்திலும் பிறரன்புச் செயல்களிலும் சிறந்து விளங்கிய மரபைக் கொண்டிருந்தது. இயேசுவின் திருச்சொற்கள் இத்திருச்சபையில் எதிரொலிக்கின்றன. இயேசு புதிய அன்புக் கட்டளையைக் கொடுத்து, அதே அன்பை நாம் அனுபவிக்குமாறும் பணிக்கிறார். பிரிவினைகளும் பழிவாங்கும் உணர்வுகளும் பல இன்னல்களை ஏற்படுத்தினாலும் நம்மில் எப்போதும் வலிமை இருக்கின்றது. நம் வாழ்க்கையில் அன்பு இருக்கிறது. நம் ஆண்டவர் நம் மத்தியில் பிரசன்னமாய் இருப்பதாக அவர் நமக்கு உறுதியளித்திருக்கிறார் என்றார். RealAudioMP3

மேலும், திருத்தந்தை, இவ்வேளையில் மேயப்புப் பணியில் தாராளமாகத் தங்களை அர்ப்பணித்திருக்கின்ற குருக்களையும் தியோக்கோன்களையும் ஊக்கப்படுத்துவதாகக் கூறினார். கிறிஸ்தவ வாழ்வு எளிதானதல்ல. கஷ்டமான சூழல்களில், குறிப்பாக, வேலை இல்லாமல் இருப்போர், வேலை இழந்தோர், தனது எதி்காலம் பற்றி உடல் ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் நிச்சயமற்ற நிலையில் இருப்போர், குடும்பங்கள், இளையோர், முதியோர், பெரும்பாலும் தனிமையாக வாழும் வயதானோர், ஓரங்கட்டப்பட்டோர், குடியேற்றதாரர் என உங்கள் எல்லாரையும் நினைக்கின்றேன். ஆம். வாழ்க்கை பல கஷ்டங்களுக்கு, பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கின்றது. எனினும் நாம் தனியாக இல்லை, கடவுள் எவ்வித பாகுபாடும் இன்றி ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். அவர் தமது அன்பால் ஒவ்வொருவருக்கும் நெருக்கமாக இருக்கிறார். எனவே இந்த உறுதிப்பாடானது, அன்றாடப் பிரச்சனைகளின் சோர்வை மேற்கொள்வதற்கும் எதிர்கொள்வதற்கும் உதவியாக இருக்கின்றது. அதிகமாக மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவச் சமூகம் இதனை அடைவதற்குக் கருவியாக இருக்க வேண்டும்.

குடும்பங்கள், அன்றாட செயல்பாடுகளில் கிறிஸ்தவக் கூறுகளின்படி வாழ அழைப்பு விடுக்கிறேன். அவைகள் தங்களது குடும்ப உறவுகளிலும் புரிந்து கொள்ளாமையிலும் இடம் பெறும் பிரிவுகளை விசுவாசத்தை வளர்ப்பதன் மூலம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும், குறிப்பாக இளையோர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். நமது வேதனைகளைப் பகிர்ந்து கொண்ட சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை புனிதத் திருத்துணி நினைவுபடுத்துகின்றது. அவர் உயிர்த்துவிட்டார். அவர் நம்மை தம் அன்பில் இணைக்க விரும்புகிறார். இதுவே மிக நேர்த்தியான நம்பிக்கையாக நமக்கு இருக்கின்றது. RealAudioMP3

இவ்வாறு மறையுரை வழங்கிய திருத்தந்தை, தூரின் மக்களை விசுவாசத்திலும் அன்பிலும் உறுதியாக இருப்பதற்கு ஊக்கப்படுத்தினார். உயிர்த்த இயேசுவில் ஒருபோதும் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றார். அவர் அனைத்தையும் புதியனவாக்குவார். அவர் உங்கள் நகரங்களில், சமூகங்களில், குடும்பங்களில், அருகாமையில் வாழ்வோரில் வாழ்கிறார் என்றார்.

இத்திருப்பலிக்குப் பின்னர் திருத்தந்தை சிறிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையும் ஆற்றினார். இதில், குடும்பங்கள், உலகத் தொழிலாளர்கள், விசுவாசத்தையும் நம்பிக்கையையும் இழந்தவர்கள், நோயாளிகள், சிறையில் இருப்போர், துன்புறுவோர், கிறிஸ்தவர்கள், இளையோர், முதியோர் மற்றும் கஷ்டங்களில் இருக்கும் என எல்லாருக்காகவும் அன்னைமரியிடம் செபித்தார் திருத்தந்தை.

இந்த ஒருநாள் திருப்பயணத்தில், மாலையில் இளையோரைச் சந்தித்தல், புனித ஜான் பேராலயத்தில் இயேசுவின் சவப்போர்வையைத் தரிசித்தல், புனித கொத்தோலெங்கோ இறைபராமரிப்பு சிறிய இல்ல ஆலயத்தைத் தரிசித்து அங்கு நோயாளிகளையும் சந்தித்தல் ஆகியவையும் உள்ளடங்கும்.

“நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்ற இயேசுவின் புதிய அன்புக் கட்டளையை நாமும் வாழ்வாக்குவோம்








All the contents on this site are copyrighted ©.