2010-04-30 15:56:56

தங்களது மாண்பையும் தனித்துவத்தையும் கண்டுணரும் தேடலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியது மதங்களின் கடமை - திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர்


ஏப்ரல்30,2010 இக்காலத்தில் பலவகைகளிலும் கைவிடப்பட்டுள்ள பல ஆண்களும் பெண்களும், இறைவனிடமிருந்து தாங்கள் பெற்றுள்ள மாண்பையும் தனித்துவத்தையும் கண்டுணரும் தேடலில் ஈடுபட்டுள்ளவேளை, அவர்களுக்கு உதவும் பணியைச் செய்ய வேண்டியது மதங்களின் கடமையாக இருக்கின்றது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.

அஜர்பைஜான் நாட்டின் (Azerbaijan) Baku வில் நடைபெற்ற பலசமயத் தலைவர்கள் உலக

மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் தவ்ரான், கடவுளற்ற, ஏன் சிலவேளைகளில் கடவுளுக்கு எதிராக்ககூட செயல்படும் இக்கால உலகினர் மத்தியில், பொதுவான உரையாடலில் மதம் தவிர்க்க முடியாத இடத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

சமய அதிகாரிகளோடு நம்பிக்கைக்குரிய உறவுகளை வைத்திருப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை பொது விவகாரங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புவதாக உரைத்த கர்தினால், அஜர்பைஜான் குடியரசு ஊக்குவித்து வரும் சமய சகிப்புத்தன்மை அனைவரும் பின்பற்ற வேண்டிய எடுத்துக்காட்டாய் இருக்கின்றது என்றும் கூறினார்.

இன்னும், இதில் கலந்து கொண்ட ஏறக்குறைய 250 கிறிஸ்தவ, முஸ்லீம், புத்த மற்றும் இந்து மதங்களின் தலைவர்கள் விடுத்த இறுதி அறிக்கையில், சமய தீவிரவாதத்திற்கெதிரானக் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

தங்களது தீவிரவாதத்திற்குச் சமயத்தை வைத்து நியாயம் சொல்லும் கோட்பாட்டைப் பரப்புகின்றவர்கள் மற்றும் இத்தகைய செயலுக்கு நிதியுதவி செய்பவர்கள் மிகப்பெரும் வெறுப்புணர்வுடன் வாழ்பவர்கள் என்றும் அவ்வறிக்கை குறை கூறியது.

இச்செவ்வாயன்று நிறைவடைந்த இந்த மூன்று நாள் உலக மாநாட்டில் 35க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பல்சமயத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இத்தகைய முதல் மாநாடு 2006ம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்றது.








All the contents on this site are copyrighted ©.