2010-04-30 15:58:14

இலங்கை புதிய பிரதமர், கொழும்பு பேராயர் சந்திப்பு, சமூக நல்லிணக்கம் பற்றி கலந்து பேசினர்


ஏப்ரல்30,2010 இலங்கையில் அனைத்து சமூகங்களுக்குள்ளும் நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்புவதற்குக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதரவைக் கோரியுள்ளார் அந்நாட்டின் புதிய பிரதமர் Disanayaka Mudiyanselage Jayaratne.

இவ்வியாழனன்று கொழும்பு பேராயர் இல்லத்தில், பேராயர் மால்கம் இரஞ்சித்தைச் (Malcolm Ranjith) சந்தித்த பின்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் ஜெயரட்னே, இலங்கை சமுதாயம் தற்சமயம் வன்முறை, கொலைகள், திருட்டு ஆகிய குற்றங்களால் துன்புறுகின்றது என்றுரைத்தார்.

மக்களை ஒழுக்கநெறிக்கூறுகளில் உருவாக்க பேராயர் மால்கம் இரஞ்சித்தின் ஆதரவைக் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார் பிரதமர்.

இலங்கை சமய விவகாரத்துறை அமைச்சராகவும் இருக்கின்ற புதிய பிரதமர் ஜெயரட்னே, வளமையான ஒழுக்க மற்றும் ஆன்மீக மதிப்பீடுகளால் அமைக்கப்படும் சமுதாயத்தைச் சமைப்பதற்கு அனைத்துச் சமயங்களின் குருக்களும் உழைக்குமாறு தான் விரும்புவதாக மேலும் தெரிவித்தார்.

UNHCR என்ற ஐ.நா.அகதிகள் அமைப்பின் அண்மை அறிக்கையின்படி, இலங்கையின் வடபகுதியிலிருந்து நாட்டிற்குள்ளே புலம் பெயர்ந்த சுமார் எழுபதாயிரம் பேர் இன்னும் வவுனியாவில் அகதிகள் முகாம்களில் இருக்கின்றனர். எனினும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோர் ஏற்கனவே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.