2010-04-29 15:36:29

புதிய தலைமுறைகளைப் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதற்கு கல்வியில் அதிகக் கவனம் செலுத்த ஆயர்கள் அழைப்பு


ஏப்ரல்29,2010 மேலும், லைபீரியா, காம்பியா, சியெரா லியோன் (Liberia, Gambia, Sierra Leone) ஆகிய நாடுகளின் ஆயர்களை அட் லிமினா சந்திப்பை முன்னிட்டு திருப்பீடத்தில் இவ்வியாழனன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அந்நாடுகளில் வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மனித மாண்பை மதிப்பதோடு ஒத்திணங்கிச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ஆயர்கள் தங்களது மேய்ப்புப்பணிகளில் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்ட அவர், புதிய தலைமுறைகளைப் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதற்கு கல்வியில் அதிகக் கவனம் செலுத்தப்படுமாறும் அழைப்புவிடுத்தார்.

ஊழலை ஒழிப்பதற்குத் தற்சமயம் அந்நாட்டில் இடம் பெற்று வரும் முயற்சிகளையும் குறிப்பிட்ட திருத்தந்தை, ஊழல், அநீதி போன்ற பாவங்களின் தன்மை வலியுறுத்தப்பட வேண்டும், இதற்கு கத்தோலிக்கத் திருச்சபையின் சமூகக் கோட்பாட்டில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுவதன் மூலம் பொதுநிலைத் தலைவர்கள் ஆன்மீக மற்றும் அறநெறியில் பக்குவப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஆயர்களின் அமைதிக்கான நடவடிக்கைகளில், பிற மதங்களோடு, குறிப்பாக இசுலாமோடு உரையாடலை வளர்ப்பதும் இணைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார் அவர்.

திருமண முறிவு, பலதாரத் திருமணங்கள் காணப்படும் சூழலில் கிறிஸ்தவக் குடும்பங்கள் திருமணம் என்ற திருவருட்சாதனத்தின் மீது கட்டப்பட்டதாய் அமைய ஆயர்கள் கவனம் செலுத்துமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

மனிதவாழ்வைப் பாதுகாத்தல், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை போக்குதல், நோய்களை ஒழித்தல் போன்றவைகளுக்கான நடவடிக்கைகள் புரிந்து கொள்தல், மதிப்பு ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் இடம் பெற வேண்டும் என்றும் காம்பியா, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய ஆப்ரிக்க நாடுகளின் ஆயர்களிடம் எடுத்துச் சொன்னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.