2010-04-29 15:38:38

தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் HIV நோய்க் கிருமிகள் பரிசோதனையைத் தொடர்ந்து செய்து தனது நிலையைப் பற்றி பொதுப்படையாக அறிவித்து வருவது குறித்து திருச்சபை அதிகாரிகள் பாராட்டு


ஏப்ரல்29,2010 தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் ஜாக்கப் ஜூமா (Jacob Zuma) HIV நோய்க் கிருமிகள் பரிசோதனையைத் தொடர்ந்து செய்து தனது நிலையைப் பற்றி பொதுப்படையாக அறிவித்து வருவது, அந்நாட்டில் AIDS நோயை ஒழிப்பதற்கு அரசியல்ரீதியாக புதிய ஆர்வம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றது என்று தலத்திருச்சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த ஞாயிறன்று HIV நோய்க் கிருமிகள் பரிசோதனை செய்து அதனால் தான் தாக்கப்படவில்லை என்ற தகவலைப் பொதுப்படையாக அறிவித்த தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் ஜூமா, நாட்டு மக்கள் இப்பரிசோதனை செய்யப்படுவதற்கு ஓய்வுபெற்ற நலப்பணியாளர்களின் உதவி தேவைப்படுகின்றது என்று உரைத்தார்.

தென்னாப்ரிக்காவில் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு HIV நோய்க் கிருமிகள் பரிசோதனை செய்யவும், அந்நாட்டில் AIDS நோய்க்கானச் சிகிச்சை தேவைப்படும் 80 விழுக்காட்டினருக்கு நோய்க்கிருமிகள் தடுப்பு மருந்துகள் வழங்கவுமான அரசின் புதிய முயற்சியைப் பாராட்டியுள்ளார் அந்நாட்டுத் திருச்சபையின் நீதி மற்றும் அமைதி ஆணைய இயக்குனர் தொமினிக்கன் அருள்தந்தை Mike Deeb.

தென்னாப்ரிக்காவின் 4 கோடியே 80 இலட்சம் மக்களில் 57 இலட்சம் பேருக்கு HIV நோய்க் கிருமிகளின் பாதிப்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.