2010-04-29 15:37:26

குடியேற்றதாரர்கள் நாடுகளுக்கு மதிப்புமிக்க வளங்களாக இருக்கின்றார்கள்-திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர்


ஏப்ரல்29,2010 பெருமளவான குடியேற்றதாரர்கள் தங்கள் தாயகங்களில் குடியேறுவது கண்டு மக்கள் பயந்தாலும் இப்புதிய வருகையாளர்கள் அவர்களை வரவேற்கும் நாடுகளுக்கு மதிப்புமிக்க வளங்களாக இருக்கின்றார்கள் என்று திருப்பீட குடியேற்றதாரர் அவையின் தலைவர் பேராயர் அந்தோணியோ மரிய வேலியோ (Antonio Maria Vegliò) கூறினார்.

ஸ்பெயினின் மாலாகாவில் நடைபெற்று வரும் CCEE என்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் அவை நடத்தும் ஐரோப்பிய குடியேற்றதாரர் மாநாட்டில் உரையாற்றிய பேராயர் வேலியோ, ஐரோப்பிய சமுதாய அவையைச் சேர்ந்த 27 நாடுகளில், பெரும்பாலும் அந்நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 கோடியே 40 இலட்சம் குடியேற்றதாரர் உள்ளனர் என்றார்.

மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற போதிலும், குடியேற்றதாரரில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் வாழ்கின்றனர் என்றார் அவர்.

குடியேற்றதாரரின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை எனினும் அண்மை கணக்கெடுப்பின்படி, ஆண்டுக்கு 3,50,000 முதல் 5,00,000 பேர் வீதம் குடியேற்றதாரர் அதிகரித்து வருகின்றனர், தற்சமயம் மொத்த எண்ணிக்கை 80 இலட்சமாக இருக்கலாம் என்றும் பேராயர் வேலியோ அறிவித்தார்.

இந்த மாலாகா மாநாடானது இச்சனிக்கிழமை நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.