2010-04-27 15:31:55

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமாறு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மதங்களின் தலைவர்கள் வேண்டுகோள்


ஏப்ரல்27,2010 பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மதங்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மத்ரித்தில் பாகிஸ்தான் மற்றும் ஸ்பெயின் அரசுகள் ஏற்பாடு செய்த மூன்று நாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் இவ்வாறு அழைப்பு விடுத்தனர்.

இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவில் மூன்று மூஸ்லீம் குருக்கள் உட்பட கத்தோலிக்க குருக்களும் இடம் பெற்றிருந்தனர். மேலும், 10 ஆசிய மற்றும் 23 ஐரோப்பிய பிரதிநிதிகளும் இக்கருத்தரங்கில் பங்கெடுத்தனர்.

அப்பிரதிநிதிகளில் ஒருவரான தொமினிக்கன் சபை அருள்தந்தை ஜேம்ஸ் ஷனன் பேசுகையில் பாகிஸ்தான் நாடு மிக மோசமான தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, இவற்றிற்கு ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்கின்றனர் என்று நிருபர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இறைமையாட்சி குடியரசு என்பதை விடுத்து அது ஜனநாயகக் குடியரசு என்று அறிவிப்பது முதல் முயற்சியாக இருக்க வேண்டும், இரண்டாவதாக, நாட்டின் உயர்மட்ட தலைமைத்துவத்திற்குப் போட்டியிடுவதற்கு சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்களும் அனுமதிக்கப்பட் வேண்டும் என்று அருள்தந்தை ஷனன் கூறினார்.

முஸ்லீம் குரு Allama Abdul Waheed Rabbani பேசுகையில், மனிதாபிமானமற்ற தற்கொலைத் தாக்குதலைகளைக் கண்டிப்பதாகக் கூறியதோடு, முஸ்லீம்கள் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் அவர்கள் மோசமான பெயரை எடுத்துள்ளார்கள், மதமாற்றத்திற்கு அல்ல மாறாக சகிப்புத்தன்மைக்கும் ஏற்புடைமைக்குமே தாங்கள் அழைப்பு விடுப்பதாகக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.