2010-04-27 15:33:48

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புத்த மத கல்வி நிலையம் கண்டுபிடிப்பு


ஏப்ரல்27,2010 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், புத்தமதத் துறவிகளால் கட்டப்பட்ட கல்வி நிலையம் ஒன்று, பீகாரில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள தெல்காரா கிராமத்தில் இடம் பெற்று வரும் தொல்பொருள் ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் ஆய்வு நடத்தி வரும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மூன்று மாடிகளை கொண்ட கட்டடம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், இது புத்த மத துறவிகளால் கல்வி நிலையமாக செயல்பட்டு வந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

34 மீட்டர் நீளமுள்ள பிரார்த்தனை கூடம், தங்கும் இடம், மண்பாண்டங்கள், புத்தர் சிலை உள்ளிட்டவையும் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது முக்கியமான தடயங்களாக கருதப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சீனாவைச் சேர்ந்த புத்தமத துறவி ஹியூன் த்சாங் என்பவர், எழுதியுள்ள நூலில், இந்தியாவில், தான் சுற்றுப் பயணம் செய்தபோது, தெலியாதகா என்ற இடத்தில் மூன்று மாடிகளை கொண்ட கல்வி நிலையம் ஒன்று இருந்ததாகவும், அதில் 1000த்துக்கும் மேற்பட்ட புத்தமத துறவிகள் தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கட்டடத்தைத்தான், அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது என்று தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.








All the contents on this site are copyrighted ©.