2010-04-26 15:41:50

இறையழைத்தல்களுக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு


ஏப்ரல்26,2010 திருச்சபையில் குருத்துவ மற்றும் துறவற வாழ்வுக்கான இறையழைத்தல்கள் அதிகரிப்பதற்கு அருட்பணியாளர்களும் பெற்றோரும் உழைப்பதற்கு சிறப்பாக அழைக்கப்படுகிறார்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

முதலாவதாக, இறையழைத்தலுக்குரிய ஒவ்வொரு சிறிய விதையை விதைப்பதற்கும், இரண்டாவதாக, இன்றைய உலகில் நற்செய்திக்கு உறுதியான சான்றுகளாக வாழ அழைக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை உணர்த்துவதற்குமான பணிக்கு குருக்களும் பெற்றோரும் அழைக்கப்படுகிறார்கள் திருத்தந்தை கூறினார்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட, இறையழைத்தல்களுக்காகச் செபிக்கும் 47வது உலக தினத்தை மையமாக வைத்து, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த சுமார் இருபதாயிரம் திருப்பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு குருக்களுக்கும் பெற்றோருக்கும் அழைப்பு விடுத்தார்.

"புனித பேதுருவின் வழிவந்தவர் என்ற வகையில் தனது பணிக்கு செபம் மற்றும் பாசத்துடன் ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றியும்" தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

"சாட்சிய வாழ்வு இறையழைத்தல்களை ஊக்குவிக்கின்றது” என்ற இந்த தினத்திற்கான தலைப்பை நினைவுபடுத்திய அவர், இறையழைத்தலைத் தூண்டக்கூடிய சாட்சிய வாழ்வின் முதல் வடிவம் செபம் என்றார்.

தனது மகன் அகுஸ்தீனை கிறிஸ்தவராகப் பார்ப்பதற்காகக் கடவுளிடம் மிகுந்த தாழ்மையுடனும் விடாஉறுதியுடனும் செபம் செய்து கடவுளின் அருளையும் பெற்ற புனித மோனிக்கா நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

பிள்ளைகள் நல்ல ஆயனாம் இயேசுவுக்குத் தங்கள் இதயங்களைத் திறக்க வேண்டுமென அவர்களுக்காகச் செபிக்குமாறும், இதன் மூலம், இறையழைத்தலின் மிகச் சிறிய வித்தானது பெரிய விருட்சமாக வளர்ந்து திருச்சபைக்கும் மனித சமுதாயத்திற்கும் மிகுந்த கனிகளைக் கொடுப்பவர்களாக அவர்கள் மாறுவார்கள் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த உலக அருட்பணியாளர் ஆண்டினால் ஊக்குவிக்கப்படும் குருக்களும் இன்றைய உலகில் நற்செய்திக்கு உறுதியான சாட்சிகளாக வாழுமாறும் கேட்டுக் கொள்வதாகக் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.