2010-04-23 15:27:57

பாலியல் முறைகேடுகள் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காண்பதில் திருச்சபை அதிகம் முனைப்புடன் செயல்படும் - திருத்தந்தை


ஏப்ரல்22,2010 குருக்களால் பாலியல் முறையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டவர்களை சந்தித்தபோது, அவர்களது துன்பங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அவர்களுக்காக தான் சிறப்பாக செபித்ததாகவும் திருத்தந்தை கூறினார்.
பாலியல் வன்முறைகளுக்கு ஆளானவர்களை மால்ட்டாவில் சந்தித்தபோது, அந்த அனுபவம் தனக்கு மிகுந்த வேதனை அளித்ததென்றும் தன் கண்களில் கண்ணீரை வரவழைத்ததென்றும் இப்புதனன்று நடைபெற்ற புதன் பொது மறைபோதகத்தின் போது திருத்தந்தை புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களிடம் கூறினார்.
திருச்சபை சந்தித்து வரும் இந்த பிரச்சனை குறித்து, திருத்தந்தையின் கருத்துக்கள் பல முறை தொடர்பு சாதனங்கள் மூலம் வெளி வந்திருந்தாலும், இப்பிரச்சனை குறித்து விசுவாசிகளிடம் திருத்தந்தை நேரடியாகப் பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.திருச்சபை இந்தப் பிரச்சனைக்கு தகுந்த தீர்வுகள் காண்பதில் அதிகம் முனைப்புடன் செயல்படுவதாகவும், இக்குற்றங்களை செய்தவர்கள் சட்டத்திற்கும், நீதிக்கும் முன்பாகக் கொண்டு வரப்படுவார்கள் என்பதையும், திருச்சபை இளையோரைப் பாதுகாப்பதற்கான பல சீரிய முறைகளில் தனி கவனம் செலுத்தும் என்றும் திருத்தந்தையின் மால்ட்டா பயணத்திற்கு பிறகு இத்திங்களன்று வெளியான வத்திக்கானின் அறிக்கை உட்பட பல அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதென செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.