2010-04-23 15:28:42

டில்லி மாநகரில் தர்மம் கேட்டு வாழ்பவர்களை அப்புறப்படுத்தும் மாநகர அரசின் முயற்சிக்கு சமயத் தலைவர்களின் மாறுபட்டக் கருத்துக்கள்


ஏப்ரல்22,2010 டில்லி மாநகரின் முக்கிய திருவழிபாட்டுத் தலங்கள் உட்பட பல இடங்களில் தர்மம் கேட்டு வாழ்பவர்களை அப்புறப்படுத்தும் மாநகர அரசின் முயற்சிக்கு சமயத் தலைவர்கள் மாறுபட்டக் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
வரும் அக்டோபர் மாதம் புது டில்லியில் நடைபெற உள்ள Commonwealth போட்டிகளை முன்னிட்டு, டில்லியில் 13 திருவழிபாட்டுத் தலங்களைச் சுற்றி தர்மம் கேட்பவர்கள் யாரும் இருக்கக் கூடாதென்று டில்லி மாநகர அரசு இத்திங்களன்று முடிவெடுத்துள்ளது.
Commonwealth விளையாட்டுகளுக்கென பிச்சை எடுப்பவர்களை அப்புறப்படுத்துவது இந்தப் பிரச்சனைக்கு எந்த வகையிலும் தீர்வாகாது என்றும், விளையாட்டுகள் முடிந்ததும் இம்மக்கள் மீண்டும் தங்கள் பழைய நிலைக்குத் திரும்பி விடுவார்கள் என்றும் டில்லி உயர் மறைமாவட்ட சமூக சேவைக் குழுவின் இயக்குனர் அருட்தந்தை சூசை செபாஸ்டின் கூறினார்.
இந்தப் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டுமென்றும், இந்த மக்கள் வாழ்வதற்கான வழிகளை அரசு செய்து கொடுக்க வேண்டுமென்றும் அருட்தந்தை செபாஸ்டின் வலியுறுத்தினார்.
வழிபாட்டுத் தலங்களில் தர்மம் செய்வது மத ரீதியான ஒரு கடமை என்பதை சுட்டிக்காட்டிய இந்து மத குரு Avdesh Pandey, அதே வேளையில், பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாக நடத்தும் பலரை அரசு இனம் கண்டு அதற்குத் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டார்.டில்லி மாநகரில் மட்டும் 60,000 பேர் பிச்சை எடுப்பவர்கள் என்றும், இவர்களில் 30 விழுக்காட்டினர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. பிச்சை எடுப்பதை தொழிலாக நடத்தும் பல அமைப்புக்கள் பெருநகரங்களில் இருப்பதையும் ஊடகங்கள் கூறிவருகின்றன.







All the contents on this site are copyrighted ©.