டாட்டா ஸ்டீல் நிறுவனம் ஒரிஸ்ஸாவில் மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுப்பதை தலத் திருச்சபையும்
மனித உரிமை அமைப்புகளும் வன்மையாய் கண்டித்துள்ளன
ஏப்ரல்22,2010 அரசின் ஒப்புதலுடன், டாட்டா ஸ்டீல் நிறுவனம் ஒரிஸ்ஸாவில் அமைக்க இருந்த
ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த ஆலை அமைப்பு குறித்து மக்களிடம் ஒரு கருத்துக்
கணிப்பு எடுப்பதற்கு அந்த நிறுவனம் முற்பட்டுள்ளதை ஒரிஸ்ஸாவின் தலத் திருச்சபையும் மனித
உரிமை அமைப்புகளும் வன்மையாய் கண்டித்துள்ளன. 1990 ஆம் ஆண்டு முதல் அரசு ஒரிஸ்ஸாவின்
பழங்குடியினர் வாழும் பகுதியில் தொழில்மய முன்னேற்றத்திற்கென 3,600 ஹெக்டேருக்கும் அதிக
அளவிலான நிலங்களை மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு அரசு வாங்கி, பெரும் தொழில் நிறுவனங்களுக்கு
பல மடங்கு உயர்வான விலைக்கு விற்று வருவதை அப்பகுதி மக்கள் எதிர்த்து வந்துள்ளனர் என்று
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.பழங்குடி மக்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு போராட்டத்தையும்
அரசு வன்மையாய் அடக்கி விடுவதாகவும், இப்போது டாட்டா நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த கருத்துக்
கணிப்பு மக்களிடம் உள்ள எதிர்ப்பு உணர்வை இன்னும் வளர்க்கும் என்றும் பழங்குடியினர் மத்தியில்
பணிபுரியும் கலிங்கநகர் பங்குத் தந்தை அருட்பணி ஜான் பாப்டிஸ்ட் கூறினார்.