2010-04-23 15:29:02

உலகத்தின் பல்வேறு கலாச்சாரங்கள் மத்தியில் உரையாடல்கள் அவசியம் - ஐ.நா.வின் தலைமைச் செயலர்


ஏப்ரல்22,2010 கடந்த ஆண்டில் உலகம் சந்தித்த பொருளாதாரப் பின்னடைவும், கடந்த வாரம் உலகம் கண்ட எரிமலைச் சீற்றமும் உலகம் முழுவதையும் பாதித்தது, உலக நாடுகள் எப்படி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதை நமக்குக் காட்டுகிறதென ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கி மூன் கூறினார்.
மனித வரலாற்றில் இதுவரை நாம் கண்டிராத அளவு, உலகின் ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வு பலரையும் பல வழிகளில் பாதிப்பதை நாம் இன்றைய காலக் கட்டத்தில் உணர முடிகிறதென்பதால், உலக நாடுகள் கலந்துரையாடலில் இன்னும் தீவிரமாக ஈடுபட அழைக்கப்படுகின்றன என்று பான் கி மூன் கூறினார்.
உலகத்தின் பல்வேறு கலாச்சாரங்களை வளர்த்தெடுக்கும் ஒரு ஆண்டாக 2010ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருப்பதை நினைவுபடுத்திய ஐ.நா.வின் தலைமைச் செயலர், உலகின் ஒரு கோடியில் உருகும் பனிமலைகள், மற்றொரு பகுதியில் வேலையின்றி வீடுதிரும்பும் தொழிலாளிகள் என்று எந்தப் பிரச்சனை ஆனாலும், உலகக் குடும்பம் ஒன்று சேர்ந்து அமர்ந்து உரையாடல் நிகழ்த்தும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று மேலும் கூறினார்.இத்தகைய உரையாடல்கள் அர்த்தமுள்ள வகையில் நடைபெற ஒவ்வொரு கலாச்சாரத்தையும் சரிவரப் புரிந்து கொள்ளும் கட்டாயத்திலும் நாம் இருக்கிறோம் என்றும், இந்தப் புரிதல் சரிவர அமையாததே நம்மிடையே அடிப்படைவாதங்களையும், தீவிரவாத குழுக்களையும் உருவாக்குகிறதென ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கி மூன் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.