2010-04-23 15:20:54

ஆப்ரிக்க அகதிகளை ஐரோப்பிய நாடுகள் புறக்கணிப்பது குறித்து பேராயர் மர்க்கெத்தோ கவலை


ஏப்ரல்23,2010 ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அடக்குமுறைகளுக்குப் பயந்து கடல் வழியாகத் தப்பி வரும் அகதிகளை ஐரோப்பிய நாடுகள் புறக்கணிப்பது குறித்து கவலை தெரிவித்தார் திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் அவைச் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ.

கடலில் கப்பல்களைத் திருப்பி அனுப்புவது சில அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கின்றது என்றுரைத்த பேராயர் மர்க்கெத்தோ, அடக்குமுறைகளுக்குத் தப்பி வருகிறவர்களை நடத்துவதற்கு அடிப்படையாக இருக்கும் அடக்குமுறையற்ற கோட்பாட்டைக் கடைபிடிக்காதவர்களைக் குறை கூறியுள்ளார்.

உரோமையில் நடைபெறும் வரலாற்று ஆய்வுகள் குறித்த 30வது சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் மர்க்கெத்தோ, அமைதியான காலத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தைக் கடைபிடிக்காதவர்கள் போர்க் காலத்தில் எப்படி அதனைக் கடைபிடிப்பார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

குடியேற்றதாரர்களாக தரை மார்க்கமாக வரும் மக்களை ஏற்கும் பல ஐரோப்பிய நாடுகள், கடல் வழியாக வருகிறவர்களைப் புறக்கணிப்பது ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கின்றது என்றும் திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் அவைச் செயலர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.