2010-04-21 15:26:41

பூர்வீகஇன மக்களின் மொழியையும் கலாச்சாரத்தோடு இணைந்த கல்வியையும் வளர்ப்பது இன்றியமையாதது - திருப்பீடம்


ஏப்ரல்21,2010 கலாச்சாரச் சுதந்திரம் பூர்வீகஇன மக்களின் மனித உரிமையாக நோக்கப்பட்டு அம்மக்களின் இனத்தன்மை, மதம், மொழி ஆகியவைகள் மதிக்கப்படுவது உறுதி செய்யப்படுமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் உலக சமுதாயத்திற்கு அழைப்புவிடுத்தார்.

பூர்வீகஇன மக்களின் கலாச்சாரப் பாரம்பரியத்தைக் காத்து, அவர்களின் மொழியையும் கலாச்சாரத்தோடு இணைந்த கல்வியையும் வளர்ப்பது இன்றியமையாதது என்றும் இந்த ஓர் உணர்வில் அம்மக்களின் மொழியை வளர்ப்பதற்கு உதவும் மையங்களையும் இலக்கண புத்தகங்களையும் திருப்பீடம் ஊக்குவிக்கின்றது என்றும் அவ்வதிகாரி கூறினார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில், பூர்வீகஇன மக்கள் குறித்து இடம் பெற்ற அமர்வில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே, இவ்வாறு கூறினார்.

பூர்வீகஇன மக்கள் கலாச்சாரம் மற்றும் தனித்துவத்தோடு வளர்தல் என்ற இவ்வாண்டுக்கான சிறப்பு தலைப்பு குறித்த உரையாடலில் பேசிய பேராயர் மிலியோரே, இந்த மக்கள் வாழும் பகுதியில் இடம் பெறும் வளர்ச்சித் திட்டங்கள் இவர்களின் கலாச்சாரப் பாரம்பரியங்களைப் புறம்தள்ளி நடைபெற்றால் அவை நன்மையைவிட தீமையையே அதிகம் கொண்டு வரும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இன்று உலகில் பூர்வீகஇன மக்கள் 30 கோடி முதல் 35 கோடி வரை உள்ளனர், எனினும் உண்மையான எண்ணிக்கையை கூறமுடியவில்லை என்று கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.