2010-04-21 15:28:38

கொத்து வெடிகுண்டுகள் தடை சட்டத்திற்கு உலகினர் ஆதரவு வழங்குமாறு இயேசு சபை அகதிப்பணி அழைப்பு


ஏப்ரல்21,2010 கொத்து வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யும் சட்டம் சர்வதேச அளவில் வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்படும் வேளை அதற்கு உலகினர் ஆதரவு வழங்குமாறு JRS என்ற இயேசு சபை அகதிப்பணி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஏப்ரல் 21ம் தேதிவரையான நிலவரப்படி, இந்தக் கொத்து வெடிகுண்டுகள் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 106 நாடுகளில் 30 நாடுகள் அமல்படுத்தத் தொடங்கியுள்ளதால் இது உலக அளவில் சட்டமாக மாறுவதற்கு வழி அமைத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி கொத்து வெடிகுண்டுகளைப் பயன்படுத்தல், தயாரித்தல் மற்றும் இடமாற்றுதல் தடை செய்யப்படுகின்றன. அத்துடன், சேமிப்புக்கிடங்கிலுள்ள வெடிகுண்டுகளை அழித்தல், பாதிக்கப்பட்ட நிலங்களைச் சுத்தம் செய்தல், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகங்களுக்கு அரசுகள் ஆதரவு அளித்தல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட கெடு காலமும் அறிவிக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தில் மேலும் பல நாடுகள் கையெழுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி வரும் ஜே.ஆர்.எஸ் அமைப்பு, ஆகஸ்ட் ஒன்றாந்தேதி செப வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்கள் மூலம் மக்கள் இந்தச் சர்வதேச சட்டம் குறித்தத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் கொத்து வெடிகுண்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளாகும். 1960கள் மற்றும் 1970களில் அமெரிக்க ஐக்கிய நாடு, இந்த ஆசிய நாடுகளில் 28 கோடியே 50 இலட்சம் கொத்து வெடிகுண்டுகளைப் போட்டிருப்பதாக Pentagon அறிவித்திருந்தது.








All the contents on this site are copyrighted ©.