2010-04-19 14:43:27

மால்ட்டா இளையோருக்கான திருத்தந்தையின் உரை.


ஏப்ரல்19,2010 கடவுளும் திருச்சபையும் யாரையும் ஒதுக்குவதில்லை, மால்ட்டா இளையோர் தங்கள் நாட்டின் கத்தோலிக்கப் பாரம்பரியம் குறித்துப் பெருமைப்படுமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இஞ்ஞாயிறு மாலையில் மால்ட்டா நாட்டின் வலேத்தா துறைமுகப் பகுதியில் அந்நாட்டு இளையோரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவர்களோடு இன்று இருப்பதில் தனக்குக் கிடைக்கும் அளவற்ற மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

குருவாகவோ அல்லது அருட்சகோதரியாகவோ திருச்சபைக்குப் பணி செய்வதற்கான அழைப்பு குறித்து சிந்திக்குமாறும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, கிறிஸ்துவைப் பின்செல்ல விரும்புகிறவர்கள் பயப்பட வேண்டாம் எனவும் ஊக்கப்படுத்தினார்.

கருக்கலைப்பும் திருமணமுறிவும் வேண்டாம் என்று ஒதுக்கி, கருவில் வளரும் குழந்தையையும் உறுதியான குடும்ப வாழ்வையும் மால்ட்டா நாடு, பாதுகாப்பது குறித்து இளையோர் பெருமைப்பட வேண்டும் என்றும், அதேவேளை வாழ்வின் புனிதத்துவம், ஆரோக்யமான சமூக வாழ்வுக்குத் தேவையான உறுதியான குடும்பம், திருமணம் ஆகியவற்றுக்கு உறுதியான சாட்சிகளாக வாழுமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

மத்தியதரைக்கடல் பகுதியில் ஒரு புள்ளி போன்று அமைந்துள்ள மால்ட்டா நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 4 இலட்சத்து 43 ஆயிரம் பேர்தான். இவர்களில் சுமார் 95 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். இவர்களில் சுமார் பத்தாயிரம் இளையோர் வத்திக்கான் கொடிகளை ஆட்டிக் கொண்டு ஆடல் பாடல்களுடன் திருத்தந்தையை வரவேற்று அவர் ஆற்றிய உரையைக் கேட்டு மகிழ்ந்தனர். இந்த இளையோரைச் சந்திப்பதற்கு முன்னர் புனித பவுல் கட்டுமரத்தில் 20 நிமிடம் கடலில் பயணம் செய்து வலேத்தா நகரை நன்றாகப் பார்வையிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.