2010-04-19 14:22:21

மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்.


ஏப்ரல் 19. மத்திய பிரதேசத்தின் Betul நகர் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் ஒன்று முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மனிதர்களால் தாக்கப்பட்டதில் தப்பியோடிய ஒருவர் உயிரிழந்துள்ளார், மூவர் காயமடைந்துள்ளனர்.

சனியன்று இரவு திறந்த வெளியில் ஜெபவழிபாடு கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்த கிறிஸ்தவக்குழு ஒன்றின் மீது 10 பேர் கொண்ட முகமூடி அணிந்த குழு ஒன்று தாக்குதல் நடத்தியதால், அங்கிருந்து தப்பியோடிய கிறிஸ்தவர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழக்க, ஏனைய மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல் துறை அறிவித்தது.

காவித்துணியால் முகத்தை மூடி வந்த இக்குழு நடத்தியத் தாக்குதலில் காயமடைந்தவர்களுள் பெண் ஒருவரும் அடங்குவார்.



சட்டீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 19. சட்டீஸ்கர் மாநிலத்தின் பிலாய் எனுமிடத்தில் சில இந்து தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, ஒரு கிறிஸ்தவக் காவல்துறை அதிகாரி உட்பட நான்கு கிறிஸ்தவர்களைக் கைது செய்துள்ளது காவல்துறை.

அனைத்திந்திய கிறிஸ்தவ அவையும், இந்திய எவாஞ்சிலிக்கல் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இந்நான்கு கிறிஸ்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டினை விசாரிக்க வந்த ஒரு கிறிஸ்தவ காவல் துறை அதிகாரியும் இந்து தீவிரவாதிகளின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் கிறிஸ்தவ சமூகம் மீதான தாக்குதலும் இடம்பெற்றதாக அனைத்திந்திய கிறிஸ்தவ அமைப்பு அறிவித்துள்ளது.

தற்போது சட்டீஸ்கரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி ரெய்ப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.