2010-04-17 14:57:12

திருத்தந்தையின் மால்ட்டா திருப்பயணம்


ஏப்ரல்17,2010. 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி உலக கத்தோலிக்கரின் தனிப்பெரும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் ஜோசப் ராட்சிங்கர் என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற திங்களன்று அதன் ஐந்தாம் ஆண்டை நிறைவு செய்து புதியதோர் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். ஏப்ரல் 16, இவ்வெள்ளிக்கிழமை தனது 83வது பிறந்த நாளையும் சிறப்பித்த திருத்தந்தை, திருச்சபையின் புனிதத்துவத்திற்காகவும் அன்று செபித்துள்ளார். திருத்தந்தையின் இந்தப் பிறந்த நாளுக்கு இந்தியாவின் ஏறத்தாழ ஒரு கோடியே 80 இலட்சம் கத்தோலிக்கரின் சார்பில் செபம் நிறைந்த வாழ்த்துக்களையும் அனுப்பியிருந்தார் இந்திய ஆயர் பேரவைத் தலைவரான மும்பை கர்தினால் Oswald Gracias அவர்கள். திருத்தந்தை, இந்த ஐந்தாண்டு காலப் பாப்பிறைப் பணியின் நிறைவாக இத்தாலிக்கு வெளியே 14வது மேய்ப்புப்பணி திருப்பயணத்தையும் நிறைவு செய்கிறார். இந்த நிறைவுப் பயணத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த நாடு மால்ட்டா. கத்தோலிக்க மதத்தை அரசு மதமாகக் கொண்டுள்ள இந்த குட்டித் தீவு நாட்டின் கிறிஸ்தவ வரலாறு புனித பவுலுடன் தொடர்புடையது. இந்தத் தொடர்பு குறித்து புதிய ஏற்பாட்டு புத்தகம் திருத்தூதர் பணிகள் 28ம் அதிகாரத்தில் காண்கிறோம். உரோமைக் குடிமகனான பவுல், தன்னை உரோமைப் பேரரசர் சீசர் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் இத்தாலிக்கு அனுப்பப்பட்டார். கடலில் பேய்ப்புயல் ஏற்பட்டதால் அவர்கள் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கியது. அதில் பயணம் செய்தவர்கள் ஒருவழியாகக் கரை சேர்ந்தார்கள். அவர்கள் சேர்ந்த தீவின் பெயர்தான் மால்ட்டா. அந்தத் தீவின் தலைவர் புப்பிலியு என்பவர் பவுலையும் அவரைச் சார்ந்தவர்களையும் நன்கு வரவேற்று மூன்று நாள்கள் அன்புடன் விருந்தோம்பினார். அத்தலைவருடைய தந்தையின் நோயையும் பவுல் அற்புதமாய்க் குணப்படுத்தினார். கப்பல் பழுது பார்க்கப்படும்வரை மூன்று மாதங்கள் அங்கு தங்கியிருந்த பவுல் கிறிஸ்துவை அறிவித்தார். எனவே அன்று புனித பவுலால் வித்திடப்பட்ட விசுவாசம் 1950 ஆண்டுகள் கடந்தும் இன்றும் உயிரோட்டமுடன் விளங்குகிறது. இன்று மால்ட்டாவில் ஏறத்தாழ 95 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் என்பதே இதற்குச் சான்றாகும்.

மால்ட்டா, தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது, இத்தாலியின் சிசிலிக்குத் தெற்காகவும், டுனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் அமைந்துள்ளது. இத்தீவுக்கூட்டங்களில் கி.மு.5200ம் ஆண்டில் கற்கால வேட்டையாடுகிறவர்கள் அல்லது விவசாயிகள் முதலில் குடியேறினர், இவர்கள் இத்தாலியின் சிசிலித் தீவிலிருந்து சென்றவர்கள் என்று ஒரு வரலாற்று குறிப்பு சொல்கிறது. இந்த மக்கள் முதலில் குகைகளிலும் பிற்காலத்தில் குடிசைகளில் வாழ்ந்தனர் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த மக்கள் மெகாலித்திக் கலாச்சார ஆலயங்களைக் கட்டியிருக்கின்றனர். கோசோவிலுள்ள பழமையான ஆலயங்கள் கி.மு.3600ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கலாச்சார ஆலயங்கள் உலகப் புகழ் பெற்றவை. உலக வரைபடத்தில் ஒரு புள்ளி போல் காணப்படும் இந்நாட்டில், மால்ட்டா, கோசோ, குமினோ ஆகிய மூன்று பெரிய தீவுகள் உட்பட மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. 315.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்நாட்டில், மால்ட்டா தீவு மட்டுமே 245.7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது.



இந்நாட்டில் வாழும் ஏறத்தாழ 4 இலட்சத்து 43 ஆயிரம் மக்களில் 93.8 விழுக்காட்டினர் மால்ட்டா இனத்தவர். எனவே இந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியும் மால்ட்டீஸ் ஆகும். ஆங்கிலமும் பரவலாகப் பேசப்படுகின்றது. இதன் தலைநகரம் வலேத்தா. இங்கு சுமார் 7200 பேர் வாழ்கின்றனர். மால்ட்டா தீவு நாடு உருவில் சிறியதாக இருந்தாலும் அம்மக்களின் மனது கடலினும் அகன்றது. அவர்களின் பிறரன்புச் செயல்களால் வளரும் நாடுகளில் எத்தனையோ குருக்கள் உருவாகியிருக்கின்றனர். உருவாகி வருகின்றனர். தலத்திருச்சபைகளுக்கும் அதிகமான உதவிகளைச் செய்து வருகின்றனர். மால்ட்டா உயர் மறைமாவட்டத்தில் 70 பங்குகளும் 287 மறைமாவட்ட குருக்களும் 381 துறவறக் குருக்களும் 902 அருட்கன்னியரும் 3,86,000 கத்தோலிக்கருக்கும் உள்ளனர்.

இந்த கத்தோலிக்க நாட்டிற்கானத் தனது 14வது வெளிநாட்டுத் திருப்பயணத்தை இச்சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குத் துவங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கி்.பி.60ம் ஆண்டில் புறவினத்தாரின் திருத்தூதராகிய புனித பவுல் இத்தீவில் கரைசேர்ந்து அங்கு நற்செய்தி அறிவித்ததன் 1950ம் ஆண்டைக் கொண்டாடுவதே இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். உரோம் பியுமிச்சினோ சர்வதேச விமானத்தளத்திலிருந்து ஆல் இத்தாலியா ஏர்பஸ் 320 வி்மானத்தில் புறப்பட்ட திருத்தந்தை, 770 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து இச்சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மால்ட்டா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். மால்ட்டாவுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம் குறித்து பேட்டியளித்திருந்த அந்நாட்டுக்கானத் திருப்பீடத்தூதுவர் பேராயர் தொம்மாசோ கப்புத்தோ, “மால்ட்டா நாடு திருத்தந்தையின் சொந்த வீடு போன்றது ஆகும், அங்கு அவருக்குக் கதவுகள் அகலத் திறக்கப்பட்டுள்ளன, இப்பயணம் எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறு” என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் திருத்தந்தைக்குக் கிடைக்கும் வரவேற்பை நாம் விவரிக்கத் தேவையில்லை. “எனினும் நாம் ஒரு தீவில் தள்ளப்படுவது உறுதி” (திருத்தூதர் பணிகள் 27,26) என்ற புனித பவுலின் வார்த்தைகளே இத்திருப்பயணத்தின் கருப்பொருளாகும்.

விமான நிலைய சிவப்புக் கம்பள வரவேற்புகளுக்குப் பின்னர் மால்ட்டா குடியரசுத் தலைவர் ஜார்ஜ் அபேலாவைச் சந்தித்தல், புனித பவுல் திருத்தலம் சென்று செபித்தல், ராபாட்டில் புனித பவுல் கெபி செல்லுதல் இச்சனிக்கிழமை பயணத் திட்டத்தில் இடம் பெற்றிருந்தன. மேலும், இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10 மணிக்குத் திருப்பலி, மாலையில் வலேத்தா துறைமுகம் சென்று இளையோரைச் சந்தித்தல் ஆகிய நிகழ்ச்சிகளை நிறைவு செய்து பின்னர் மாலை 6.40 மணிக்கு விமான நிலையம் சென்று பிரியாவிடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரோமைக்குப் புறப்படுவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்துடன் இந்த 14வது வெளிநாட்டுத் திருப்பயணமும் நிறைவு பெறும். இதற்கு முன்னர் இந்த மால்ட்டா நாட்டிற்குத் திருத்தந்தை 2ம் ஜான் பால் மூன்று தடவைகள் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திருப்பயணத்தைத் தொடங்கு முன்னர் இத்தாலிய குடியரசுத் தலைவர் Giorgio Napolitano வுக்குத் தந்திச் செய்தியும் அனுப்பினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். புனித பவுலின் அடிச்சுவடுகள் பதிந்த இடத்துக்கான இத்திருப்பயணம், மால்ட்டா மற்றும் இத்தாலி மக்களின் விசுவாசத்தை ஆழப்படுத்தும் என்ற தமது நம்பிக்கையையும் அத்தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. ஏறத்தாழ 26 மணி நேரம் கொண்ட திருத்தந்தையின் இப்பயணத்திற்காகச் செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.