2010-04-16 16:24:48

தாய்லாந்தின் அரசியல் நெருக்கடிகள் தீர்க்கப்படுவதற்குச் செபிக்குமாறு மதங்களின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள்


ஏப்ரல்16,2010 தாய்லாந்து நாட்டை முடக்கிப்போட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்தத் தங்கள் கவலையை தெரிவித்த அதேவேளை, அந்நாட்டிற்காகச் செபிக்குமாறு, புத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மதங்களின் மூத்த தலைவர்கள் சமய நிறுவனங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தாய்லாந்தின் தேசிய மனித உரிமைகள் அவை, பாங்காக் கத்தோலிக்க பேராயர் Francis Xavier Kriengsak Kovitvanit, புத்தமதக்குரு Thammakosajarn, தாய்லாந்து இசுலாமிய அவையின் உதவித்தலைவர் Imron Maluleem ஆகியோரை இவ்வியாழனன்று அழைத்து தற்போதைய அரசியல் பிரச்சனை குறித்து கலந்து பேசியுள்ளது.

2006ம் ஆண்டு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பில் பதவியிழந்த பிரதமர் Thaksin Shinawatra வின் ஆதரவாளர்கள், தற்போதைய பிரதமர் Abhisit Vejjajiva ன் அரசுக்கு எதிராக ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு உடனடியாக மக்களவையைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 800க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்தின் அனைத்து மதத்தினரும் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு சில நிமிடங்கள் நாட்டின் அமைதிக்காகச் செபிக்குமாறு அந்நாட்டின் மூன்று மதங்களின் தலைவர்கள் தங்கள் விசுவாசிகளைக் கேட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.