2010-04-14 14:59:19

பாலியல் ரீதியாகத் தவறு செய்யும் நபர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான செயல்பாடுகளைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழிநடத்தி வருகிறார்-இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர்


ஏப்ரல்14,2010 திருச்சபையில் பாலியல் ரீதியாகத் தவறு செய்யும் நபர்கள் அல்லது அத்தகைய புகார்களுக்குச் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறுகிறவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான செயல்பாடுகளைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழிநடத்தி வருகிறார் என்று இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Angelo Bagnasco கூறினார்.

கத்தோலிக்கத் திருச்சபையில் குருக்களால் செய்யப்பட்ட பாலியல்ரீதியான தவறான செயல்கள் குறித்து இந்நாட்களில் ஊடகங்களில் பேசப்பட்டுவருவதை முன்னிட்டு ilsole24ore.com என்ற இணையதளத்திற்குப் பேட்டியளித்த கர்தினால் Bagnasco இவ்வாறு தெரிவித்தார்.

குருக்களின் இச்செயல்கள் வெட்கத்துக்குரியவை மற்றும் மனதிற்கு வேதனைதருகின்றவையாக இருக்கின்றன என்றுரைத்த கர்தினால், திருச்சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பாலியல் துர்ப்பிரயோகம் செய்பவர்கள் நீதி விசாரணைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று உரைத்தார்.

பொதுவாக, பாலியல் துர்ப்பிரயோகம் கடுமையான மற்றும் அருவருப்பான குற்றம், துர்மாதிரிகையான கடுமையான பாவம், கடவுளுக்குத் தம்மை நேர்ந்து கொண்டவர்கள் இதனைச் செய்யும் பொழுது அது இன்னும் கடுமையான குற்றமாக ஆகிறது என்று கர்தினால் Bagnasco குறிப்பிட்டார்.

உள்நோக்கமற்ற மற்றும் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் திருத்தந்தையை குறிவைத்து நடத்தப்படும் குற்றச்சாட்டுக்களின் மத்தியில் திருச்சபையில் இடம் பெறும் தவறான இந்நடவடிக்கைகளைக் களைவதற்கு திருத்தந்தை எடுத்து வரும் முயற்சிகளுக்கு இத்தாலிய ஆயர்களும் இத்தாலிய திருச்சபையும் தங்களது ஆதரவை வழங்குவதாக கர்தினால் Bagnasco தெரிவித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.