2010-04-14 15:52:27

ஏப்ரல் 15. - நாளும் ஒரு நல்லெண்ணம்.


சித்திரை திங்கள் அனைவரும் வரவேற்கும் பொன்னான நாள். சித்திரையில் வரும் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி என்று தமிழர்களால் தொன்று தொட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் சித்திரைத் திங்களில்தான் எல்லா பெரிய கோயில்களிலும் 12 நாட்களுக்கு சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

தவசீலர்கள் அவதரித்த அற்புத மாதம்!

நான்முகன் பூவுலகை படைத்த சித்திரைத் திருமாதம் என்பர்.

இந்த வருட சித்திரை மாதப் பிறப்பு மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. காரணம் சித்திரை முதல் தேதியில் (14-4-2010) ஓர் அமாவாசையும் சித்திரை 30-ஆம் தேதியில் (13-5-2010) ஓர் அமாவாசையும் என இரண்டு அமாவாசைகள் வருகின்றன.

பொதுவாக சித்திரை மாதத்திற்குப் பல சிறப்புகள் இருப்பதை புராணங்கள் மூலம் அறியலாம்.

பருவங்களில் சிறந்தது இளவேனிற் பருவம். இளவேனிற் காலத்தின் முதல் மாதமே சித்திரை தான். சித்திரை மாதத்தில் மல்லிகையும் முல்லையும் மலர்ந்து மணம் பரப்பி மக்களை மகிழ்விக்கும். தேமாவும் தீம்பலாவும் இனிய பழங்களை மாந்தருக்கு வாரி வழங்கும். இச் சித்திரை மாதத்தில் மழை நீங்கி, ஆதவன் வெளிப்பட உலகம் பிணி, பீடை நீங்கி, ஆரோக்கியமாக இயங்க ஆரம்பிக்கின்றது. இத் திங்களில் இரு பெருஞ் சுடர்களும் ஒளி தர இரவும் பகலும் செம்மையாகத் தோன்ற மக்கள், கால்நடைகள், பயிர்கள் தழைத்து இன்புறும்.

சித்திரை பிறந்தால் நித்திரை கலையும் என்பர். இவ்விருக்தி ஆண்டில் அனைத்து பண்புகளையும் நெஞ்சில் நிறுத்தி அனைவரும் ஒரு குலம் என்ற உணர்வுடன், உயிர் துடிப்புடன் நடைபோடுவோம். வாழ்த்துக்கள்.








All the contents on this site are copyrighted ©.