2010-04-13 15:48:36

மக்கள் தொகைப்பெருக்கமும் வளர்ச்சியும் குறித்து ஐ.நா.வில் பேராயர் மிலியோரின் உரை.


ஏப்ரல்13,2010 பொருளாதார நெருக்கடிகளுக்கு மக்கள் தொகைப் பிரச்சனையும் ஒரு காரணமாக உலகால் நோக்கப்படும் வேளை, இந்நெருக்கடிகளுக்கானத் தீர்வாகவும் மக்கள் தொகைப் பெருக்க மாற்றங்களை நோக்குதல் குறித்து தன் கருத்துகளை வெளியிட்டுள்ளார் ஐ.நாவிற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே.
கடந்த சில பத்தாண்டுகளில் மக்கள்தொகைப்பெருக்கம் 7 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாக குறைந்துள்ளது முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு உதவியுள்ள அதே வேளை, பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் வேண்டத்தகாத விளைவுகளைக் கொணர்ந்துள்ளது என ஐ.நாவின் 43வது அவையில் மக்கள்தொகையும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் இடம் பெற்றக் கூட்டத்தில் உரையாற்றினார் பேராயர் மிலியோரே.
மக்கள் தொகைப் பெருக்கம் பெருமளவில் குறைந்துள்ள நாடுகள் தங்கள் கொள்கைகளை மீள்பார்வையிட்டு சரியான சமூகத்திட்டங்கள் மூலம் மக்கள் பிறப்புகளை ஊக்குவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர்.
ஒவ்வோர் ஆண்டும் உலகில் குழந்தைப் பிறப்பின் போது 5 இலட்சம் தாய்மார்கள் உயிரிழப்பது குறித்த புள்ளி விவரத்தையும் வெளியிட்ட பேராயர், இதில் 99 விழுக்காடு வளரும் நாடுகளில் இடம்பெறுவது குறித்த கவலையையும் தெரிவித்தார்.
இவ்வுலகில் கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கும், பிறந்த சிசுக்களுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ள நிதியுதவிகள் போதுமானதாக இல்லை என்ற திருப்பீட நிரந்தரப் பார்வையாளர், கல்வியின் மீதான முதலீடுகள் மூலம் பலப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் என்றார்.
2008ம் ஆண்டில் மட்டும் 24 கோடியே 30 இலட்சம் பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு 8இலட்சம் உயிரிழப்புகள் இடம்பெற்றதையும் சுட்டிக்காட்டினார் அவர்.ஏழை நாடுகளின் குழந்தைகள் காப்பாற்றப்பட சர்வேதேச அளவிலான ஒருமைப்பாட்டுணர்வு தேவைப்படுவதாகவும் அழைப்பு விடுத்தார் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் மிலியோரே.







All the contents on this site are copyrighted ©.