2010-04-13 15:48:48

திருத்தந்தைக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லிவருவது, செய்தித்தாள்கள் அதிகம் விற்பதற்கு எடுக்கப்படும் முயற்சி - வத்திக்கானின் செய்தித்தாள் ஆசிரியர் 


ஏப்ரல்13,2010 குருக்களின் பாலியல் தொடர்பான தவறுகளைக் களைய திருத்தந்தை சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்று அவருக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து ஊடகங்கள் சொல்லிவருவது, செய்தித்தாள்கள் அதிகம் விற்பதற்கு எடுக்கப்படும் முயற்சியாகத் தெரிகிறதென்று வத்திக்கானின் செய்தித்தாள் ஆசிரியர் கூறியுள்ளார்.
அண்மையில் விற்பனையில் குறைந்துள்ள தங்கள் பத்திரிக்கைகளின் எண்ணிக்கையை இத்தாலி, மற்றும் பிற நாட்டு பத்திரிக்கைகளும் அதிகரிக்கும் நோக்கத்தோடு திருச்சபை சந்தித்துள்ள இந்த பிரச்சனையை திரித்து சொல்லி வருகின்றன என்று இத்திங்களன்று பல அயல்நாட்டு செய்தியாளர்களைச் சந்தித்த வத்திக்கான் செய்தித்தாள் L'Osservatore Romano வின் ஆசிரியர் Giovanni Maria Vian கூறினார்.
கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரான பகைமை உணர்வு உலகில் பரவலாக உள்ளது ஒரு வரலாற்று உண்மை என்று கூறிய Maria Vian, அண்மைக் காலங்களில் பத்திரிகை தர்மம் உலகெங்கும் குறைந்து வருவதும், உடனுக்குடன் பரபரப்பான செய்திகள் வழங்குவதே பத்திரிகை உலகத்தின் தலையாய கவலையாக இருப்பதும் இது போன்ற செய்திகள் வருவதற்குக் காரணம் என்று சுட்டிக் காட்டினார்.
பத்திரிக்கைகள் மட்டுமின்றி இணைய தளங்களில் வரும் செய்திகளும் அவசரமாக வெளிவருகின்றன என்றும் அவை எந்த ஒரு பிரச்சனையையும் முழுவதும் ஆராயாமல் எழுதப்படுகின்றன என்றும் வத்திக்கானின் பத்திரிகை ஆசிரியர் எடுத்துரைத்தார். ஊடகங்களின், பத்திரிகை உலகத்தின் அனைத்துச் செய்திகளும் திருத்தந்தையால் தினமும் கவனமாக படிக்கப்படுகின்றன என்றும், இதனால், திருத்தந்தை உலகத்தின் எல்லா நிகழ்வுகளையும் சரிவர அறிந்து வருகிறார் என்றும் ஆசிரியர் Giovanni Maria Vian பன்னாட்டு செய்தியாளர்களிடம் தெளிவு படுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.