2010-04-12 15:08:15

போலந்து நாட்டிற்கான தன் அனுதாபத்தை வெளியிட்டார் திருத்தந்தை


ஏப்ரல்12,2010 சனியன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஞாயிறு மூவேளை ஜெப உரைக்குப்பின் போலந்து நாட்டின் இத்துயரநிலை குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட பாப்பிறை, இதில் உயிரிழந்தவர்களுக்கான ஜெபத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களுடனான அருகாமைக்கும் உறுதி கூறினார்.
மேலும், கடந்த சனியன்று இத்தாலியின் தூரின் நகரில் இயேசுவின் இறந்த உடலை மூடியிருந்த துணி பொதுமக்களின் பார்வைக்கென திறந்து வைக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, இப்புனிதத்துணி மீதான பக்தி முயற்சிகள் இறைவனின் முகத்தைத் தேட விசுவாசிகளுக்கு உதவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
இப்புனிதத் துணியைப் பார்வையிட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மே மாதம் 2ந்தேதி தூரின் நகர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, வரும் 6 வாரக்காலத்திற்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும் இப்புனிதத் துணியை பார்வையிட 20 இலட்சம் திருப்பயணிகள் வருவார்கள் என கணிக்கப்பட்டிருக்க, ஏற்கனவே 15 இலட்சம் பேர் முன்பதிவுச் செய்துள்ளதாக தூரினிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.