2010-04-10 13:45:15

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
"கவிதை பயம் எனக்கு, கவி பயம் எனக்கு, காடு பயம் எனக்கு, நாடு பயம் எனக்கு... எல்லாமே பயமயம்." என்று தமிழ் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவையாகப் பேசுவார் அந்தக் கதையின் நாயகன். வாழ்க்கையில் பார்க்குமிடத்திலெல்லாம் பயங்களைச் சந்திக்கும் மனிதர் அவர். பயம், சோகம், கோபம் என்று உணர்வுகளின் ஆதிக்கத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை நாம் செலவழிக்கிறோம். செலவழிக்கிறோம் என்பதை விட, வீணடிக்கிறோம், அல்லது தொலைத்து விடுகிறோம் என்று கூடச் சொல்லலாம்.
மனித உணர்வுகளுக்கு நான் எதிரி அல்ல. அவை நம் வாழ்வுக்கு மிகவும் அவசியம். ஆனால், இந்த உணர்வுகளை நாம் ஆள்வதற்குப் பதில், உணர்வுகள் நம்மை ஆள விட்டு விடும் போது, வாழ்க்கையைத் தொலைக்க வாய்ப்புண்டு. இப்படி நம் வாழ்வை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே அதிக ஆபத்தானது எது தெரியுமா? சந்தேகம். சந்தேகம் ஓர் உணர்வா என்று கூட உங்களில் சிலர் சந்தேகப்படலாம். நான் அதை ஒரு கூட்டு உணர்வு என்று சொல்வேன். சந்தேகம் பல உணர்வுகளின் பிறப்பிடம். சந்தேகம் குடிகொள்ளும் மனதில் கூடவே பயம், கோபம், வருத்தம் என்று கூட்டுக் குடித்தனம் மனதில் ஏற்படும்.

சந்தேகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விவிலியத்தில் கூறப்படும் ஒரு மனிதர் தோமையார் என்று அழைக்கப்படும் தோமா. உண்மையைப் பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரை "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அப்படி சந்தேகப்படும் யாரையும் “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிட்டார்.
தோமா இயேசுவைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும் நம்மில் பலர், என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்... உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்து "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்ற கேள்வியை கேட்டு, "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு." என்ற தீர்ப்பையும் தந்து விடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறுவது எளிது.

இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி தலைமுறை, தலைமுறையாய் ஆயிரமாயிரம் விளக்கங்களைக் கேட்டு வந்துள்ள கிறிஸ்தவ பாரம்பரியத்தில் ஒருவனாய் இன்று வாழும் நானோ நீங்களோ அந்த உயிர்ப்பு குறித்த விசுவாசத்தில் அவ்வப்போது தடுமாறுகிறோம். அப்படியிருக்க, இத்தனை விளக்கங்கள் இல்லாதபோது, அதுவும் உயிர்ப்பு பற்றிய எண்ணங்களே தெளிவில்லாத யூத சமுதாயத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வளர்ந்த சீடர்களில் ஒருவர் இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகித்தார் என்பதற்காக அவரைக் கண்டனம் செய்வது தவறு. தீர்ப்பிடுவது தவறு.
கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம்.
ஆகவே, தீர்ப்புகளை எழுத பேனாக்களைத் திறந்து வைத்திருந்தால், அவைகளை மூடிவிட்டு, முதலில் அந்த நீதி இருக்கைகளிலிருந்து எழுந்து வாருங்கள். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்த சம்பவத்தைப் பார்ப்போம். இன்றைய நற்செய்தியைக் கேட்போம்.

யோவான் 20: 19-31

இப்போது வாசித்த நற்செய்தியின் முதல் பகுதியைக் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்தால், இயேசுவின் உயிர்ப்பை தோமா மட்டும் சந்தேகப்படவில்லை. எல்லா சீடர்களுமே சந்தேகப்பட்டனர் என்பது தெளிவாகும்.
யூதர்களுக்குப் பயந்து சீடர்கள் கதவு சன்னல் எல்லாவற்றையும் மூடி வைத்திருந்த அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றார். மூடியிருந்த கதவு காற்றில் லேசாக ஆடினாலும், கதவை யாரோ தட்டுவது போலவும், தங்களைத் தாக்க யாரோ வந்துவிட்டது போலவும் சந்தேகத்தில், அச்சத்தில் வாழ்ந்தனர் அந்தச் சீடர்கள். அந்தச் சூழலில், கதவு மூடியபடி இருக்க, இயேசு அவர்கள் முன் நின்றபோது, அவர்கள் மகிழ்ந்திருப்பார்களா? சந்தேகம் தான். அரண்டு போயிருப்பார்கள். யோவான் நற்செய்தியில் சீடர்கள் பயந்ததாய்க் குறிப்பிடவில்லை ஆனால், இதை லூக்கா நற்செய்தி அப்பட்டமாகக் கூறுகிறது.
லூக்கா 24: 36-37
சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். 
லூக்கா, யோவான் என்ற இரண்டு நற்செய்திகளிலும் இயேசு அவர்களுக்குத் தன் கையையும், விலாவையும் காட்டினார் என்றும், தன்னைத் தொட்டுப் பார்க்க அழைத்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இயேசு வந்து நின்றதும் அவரைச் சீடர்கள் மகிழ்வாய் வணங்கித் தொழுதிருந்தால், இயேசு அவர்களிடம் தன்னை வந்து தொடும்படி அழைப்பு விடுத்திருக்க மாட்டார். இல்லையா? அவர்கள் கண்களில் அந்த சந்தேகம் தெரிந்ததால், இயேசு இந்த அன்பு அழைப்பைத் தந்தார்.
இயேசுவிடம் கேட்க முடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த இதே சந்தேகத்தைத் தான் தோமா வாய் விட்டு சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லா சீடர்களுமே சந்தேகத்தில் பயத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

தங்கள் மீன் பிடிக்கும் தொழில், தங்கள் பெற்றோர் எல்லாவற்றையும் விட்டு விட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்த சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப் போன நேரத்தில், அந்த உலகம் ஆணி வேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவை அடித்தளமாய் வைத்து அவர்கள் கட்டியிருந்த பல மனக் கோட்டைகள் தரை மட்டமாக்கப்பட்டன.
எருசலேமில், கல்வாரியில் அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை முற்றிலும் நிலை குலையச் செய்து விட்டன. இயேசு அவர்கள் வாழ்வில் விட்டுச் சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பி விட்டன. யாரையும், எதையும் சந்தேகப் பட்டனர். தங்களில் ஒருவனே இந்தக் கொடுமைகள் நடக்கக் காரணமாய் இருந்தது அவர்களது சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது. இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது.
சிலுவையில் கந்தல் துணிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை உடலோடு புதைப்பதற்கு முன்பே, மனதால் அவரைப் புதைத்து விட்டனர் சீடர்கள். அந்த கல்வாரிக்குப் பின், சிலுவைக்குப் பின் ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்துவிட்டனர். இன்னும் ஏதாவது மீதம் இருக்கிறதென்றால், அது தங்கள் அழிவு மட்டுமே என்று அறிவுப் பூர்வமான ஒரு முடிவுக்கு வந்து விட்டனர்.

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட அந்த அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்த அந்த சீடர்களை இயேசு அப்படியே விடுவதாய் இல்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். இயேசு அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய சாத்தப்பட்ட கதவுகள் ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரும் பாறையே அவரைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கதவுகள் எம்மாத்திரம்.
சாத்தப்பட்ட அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றதை அவர்களால் நம்ப முடியவில்லை. கதவு, சன்னல்கள் எல்லாம் சாத்தப்பட்ட ஒரு அறைக்குள் உடலோடு ஒருவரால் வர முடியுமா? முடியாது. இயற்கை நியதிக்கு, அறிவியல் கூற்றுகளுக்கு முரணான ஒரு செயல். இயற்கை நியதிகள், அறிவியல் இவை மீறப்படும் போது, சந்தேகம் எழும். அறிவு அந்தச் செயலை ஏற்க மறுக்கும்.
ஆனால், அறிவு சொல்வதை மட்டும் வைத்து வாழ்க்கை நடத்திவிட முடியாதே. இரண்டும் இரண்டும் நான்கு தான். ஆனால், சில சமயங்களில் இரண்டும் இரண்டும் ஐந்தாகலாம். இதைக் காண மனம் வேண்டும், ஆன்மா வேண்டும், வெறும் அறிவு இங்கே உதவாது. எத்தனை முறை இது போன்ற ஒரு அனுபவம் நமக்கு இருந்திருக்கிறது!
நமது அறிவு ஒரு வழியில் சிந்திக்கும் போது, மனம்... ஆழ் மனம் வேறு வழியில், அறிவுக்கு முற்றிலும் மாறுபட்ட வழியில் சிந்தித்திருக்கிறதல்லவா? பல சமயங்களில் அறிவை விட மனம் சொல்வது மிக அழகானதாய், அற்புதமானதாய், உண்மையாய் இருந்திருக்கிறது. உண்மைதானே?

அறிவை மட்டும் நம்பி தங்கள் நம்பிக்கையை முழுவதும் இழந்திருந்த அந்தச் சீடர்களுக்கு, அந்த அறிவுப் பசிக்குத் தீனி கேட்கும் வகையில் தோமா “அவர் காயங்களில் நான் விரலை வைக்க வேண்டும்” என்று விதித்த நிபந்தனைக்கு விடையாக இயேசு சொன்னது இது: “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்… நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். (யோவான் 21: 27-29) இந்தச் சொற்களை வித்தியாசமாக நினைத்துப் பார்க்க வேண்டுமெனில், இயேசு சீடர்களிடம், தோமாவிடம், நம்மிடம் சொல்வது இதுதான்: "அறிவை மட்டும் நம்பி வாழாதே. மனதை நம்பு, ஆன்மாவை நம்பு. என்னை நம்பு."

தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதில் தெளிவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் மூலம் அவர் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" இயேசுவை கடவுள் என்று கூறிய முதல் மனிதப் பிறவி தோமாதான். இயேசு தோமாவை இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும், சிறப்பாக, நம் தாயகத்திலும் பறை சாற்றினார் தோமா.
தோமா சந்தேகித்ததாய், சீடர்கள் சந்தேகித்ததாய் நாம் சிந்தித்த இந்த சம்பவம் ஒரு சில பாடங்களை நமக்குச் சொல்லித் தருகின்றன. அறிவு சொல்வதை மட்டும் நம்பி வாழ்வது போதாது, மனம், ஆன்மா இவைகளின் குரலுக்கும் நாம் செவி சாய்க்க வேண்டும்.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலர் குறித்து முடிவுகள் எடுக்கிறோம். ஒரு சில சமயங்களில் ஒருவர் பிறந்த இடம், குலம், அவர் செய்யும் தொழில் இவற்றின் அடிப்படையில் Prejudice என்று பொதுவாய் நாம் அழைக்கும் பல முற்சார்பு எண்ணங்களால் முடிவுகள் எடுத்து, மனக்கதவுகளை மூடி வைத்து விடுகிறோம்.
அந்த நேரங்களில் மூடிய மனக்கதவுகளை உடைத்து விட்டு, நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அந்த ஒரு சிலர் அல்லது மிகப் பலர் நம் முன் நிற்கும் போது, தொடர்ந்து அவர்கள் மீது சந்தேகம் கொள்ளாமல், சந்தேகங்களை மூடி வைத்து விட்டு, மனங்களைத் திறந்து அவர்களைத் தொடும் பக்குவம் பெற முயல்வோம்.

மனிதர்கள் மாறக்கூடியவர்கள், அவர்கள் குறித்த நம் எண்ணங்களை மீறக் கூடியவர்கள் என்பதை இயேசுவும், மூடிய கதவுகளுக்குப் பின் வாழ்ந்து வந்த சீடர்களும், அவரைக் கடவுள் என்று அறிக்கையிட்ட தோமாவும் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.முற்சார்பு எண்ணங்களை உடைக்க, மூடப்பட்ட மனக் கதவுகளை நாம் திறக்க, அறிவை மட்டும் நம்பி வாழாமல், மனதை, இறைவனை நம்பி வாழ இறைஅருள் வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.