2010-04-10 12:48:56

அமெரிக்க அரசுத் தலைவரும், ரஷ்ய அரசுத் தலைவரும் கையொப்பமிட்ட அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை பல உலக நிறுவனங்களின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்


ஏப்ரல்10,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவரும், ரஷ்ய அரசுத் தலைவரும் இவ்வியாழனன்று கையொப்பமிட்ட அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை ஐ.நா.வின் தலைமைச் செயலர் Ban Ki-moon உட்பட பல உலக நிறுவனங்களின் தலைவர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
New START Treaty என்று வழங்கப்படும் இந்த கூட்டறிக்கை உலக நாடுகள் மத்தியில் நிலவும் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய சகாப்தம் என்றும், அணு ஆயுதங்களே இல்லாத ஒரு உலகம் உருவாகும் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு முயற்சி என்றும் Ban Ki-moon கூறினார்.
செக் குடியரசின் தலைநகராகிய ப்ராக் நகரில் இவ்வியாழனன்று கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தைக் குறித்து கருத்து வெளியிட்ட அனைத்துலக அணு சக்தி சேவை (International Atomic Energy Agency - IAEA) என்ற நிறுவனத்தின் இயக்குனர் Yukiya Amano, இந்த உலகம் பாதுகாப்பிலும், அமைதியிலும் முன்னேற இது போன்ற முயற்சிகள் பெரிதும் உதவும் என்று கூறினார்.
வருகிற வாரம் அமெரிக்காவின் வாஷிங்கடனில் நடை பெறும் அணு ஆயுதக் களைவு குறித்த உச்சிமாநாட்டில் ஐ.நா.வின் தலைமைச் செயலர் கலந்து கொள்வார் என்றும், அந்த மாநாட்டில் அணு ஆயுதக் களைவு குறித்து உலகத் தலைவர்களிடம் Ban அதிகம் வலியுறுத்துவார் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இதற்கிடையே, இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருந்த இஸ்ராயேல் பிரதமர் Benjamin Netanyahu தன் பயணத்தை ரத்து செய்துள்ளார் என்று மற்றொரு செய்திக் குறிப்பு கூறுகிறது.இஸ்ராயேல் நாட்டின் அணு ஆயுத தளவாடங்கள் குறித்த கேள்விகளை எகிப்தும் துருக்கியும் இந்த உச்சி மாநாட்டில் எழுப்பும் என்ற தகவல் அறிந்ததால், இஸ்ராயேல் பிரதமர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.