2010-04-09 15:17:43

சீனாவில் கத்தோலிக்க ஆயர் ஒருவர் வெளிப்படையாக பொறுப்பு ஏற்பதை சீன அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது


ஏப்ரல்09,2010 சீனாவில் மங்கோலியாவின் உள்பகுதியில் கத்தோலிக்க ஆயர் ஒருவர் வெளிப்படையாக பொறுப்பு ஏற்பதை சீன அரசு இவ்வியாழனன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது.
Bameng மறைமாவட்டத்தின் அருட்தந்தையாய் இருந்த Matthias Du Jiang 2004 ஆம் ஆண்டு மே மாதம் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார். ஆயினும் அந்தத் திருநிலைப்பாட்டை சீன அரசு அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளாததால், ஆயர் Du Jiang கடந்த ஆறு ஆண்டுகள் மறைமுகமாகவே செயல்பட வேண்டியிருந்தது. இந்நிலையில், இவ்வியாழனன்று Sanshenggong கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயர் அதிகாரப்பூர்வமாக அப்பகுதியின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள அரசு அனுமதித்தது.
1963ஆம் ஆண்டு பிறந்த ஆயர் Du Jiang, தனது 26வது வயதில் குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். 41வது வயதில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார். இவ்வியாழனன்று சீன அரசின் ஒப்புதலுடன் ஆயர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
ஏறத்தாழ 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்தத் திருப்பலியிலும், பிற நிகழ்ச்சிகளிலும் 20 குருக்கள், 300க்கும் அதிகமான விசுவாசிகள் பங்கேற்றனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற Paul Meng Qinglu என்ற குரு மாணவர் வத்திக்கான் மற்றும் சீன கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஒப்புதல்களுடன் ஏப்ரல் 18 ஞாயிறன்று வெளிப்படையாக, குருவாகத் திருநிலைப் படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத் தக்கது.ஆயர் Du Jiang பதவி ஏற்றுள்ள Bameng பகுதியில் வெளிப்படையாக சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள திருச்சபையில் 40,000 கத்தோலிக்கர்கள் உள்ளனர் என்றும் அதே பகுதியில் ஆயர் Joseph Ma Zhongmu வின் பொறுப்பில் மறைமுகமாக திருச்சபை ஒன்று இயங்கி வருவதாகவும் செய்திக்குறிப்பு ஒன்று மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.