2010-04-09 15:17:24

கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைக் குறித்த உண்மையை அறிவதில் கர்நாடக அரசு ஆர்வம் காட்டவில்லை - அருட்தந்தை Faustine Lobo


ஏப்ரல்09,2010 கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைக் குறித்த உண்மையை அறிவதில் கர்நாடக அரசு ஆர்வம் காட்டவில்லை என்று கர்நாடக தலத்திருச்சபை பொறுப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த வன்முறைகள் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கையைச் சமர்பிப்பதில் தொடர்ந்து பிரச்சனைகளை அரசு உருவாக்கி வருவதிலிருந்து இந்த விசாரணையில் அரசின் ஆர்வம் அதிகமில்லை என்பது தெளிவாகிறது என்று கர்நாடக தலத் திருச்சபையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருட்தந்தை Faustine Lobo செய்தியாளர்களிடம் கூறினார்.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற வன்முறைகள் குறித்த முழு விவரங்களை ஆய்ந்தறிய 2009ஆம் ஆண்டு நிறுவப்பட்ட குழு ஒன்று, தன் அறிக்கையைச் சமர்ப்பிக்க ஆறு மாத காலம் அளிக்கப்பட்டது. எனினும் இந்தக் குழு ஏழு முறை தன் ஆய்வுக்கான காலத்தை நீட்டிக்கக் கோரியது.
இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் தன் அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் அக்குழு மேலும் ஆறு மாதங்கள் தேவைப்படுவதாகக் கூறியதை அடுத்து, அரசு அந்தக் குழுவுக்கு இன்னும் ஒரு மாதம் அளித்துள்ளது எனவும், தாங்கள் கேட்ட ஆறு மாத காலம் அளிக்கப்படாவிடில், யார் மீதும் குற்றப் புகார் சுமத்தாத ஓர் அறிக்கையை அரசுக்கு அளிக்கவிருப்பதாக இந்தக் குழு அறிவித்துள்ளதாகவும் ஆதாரமற்ற சில செய்திகள் கூறியுள்ளன.விசாரணையைச் சரிவர செய்வதற்குத் தேவையான காலத்தையும், நிதியையும் அரசு ஒதுக்காதது பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக அருட்தந்தை Lobo கூறினார்.







All the contents on this site are copyrighted ©.