2010-04-07 15:42:17

உயிர்ப்புப் பெருவிழாவின் போது வயது வந்தவர்கள் திருமுழுக்கு பெற்றுள்ளது திருச்சபை உயிருள்ளதாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது - மும்பை கர்தினால் Oswald Gracias


ஏப்ரல்07,2010 மும்பை உயர் மறைமாவட்டத்தில் இந்த உயிர்ப்புப் பெருவிழாவின் போது வயது வந்த 288 பேர் திருமுழுக்கு பெற்றுள்ளனர் என்பது, திருச்சபை இன்னும் உயிருள்ளதாகவும், பொருளுள்ளதாகவும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறதென கர்தினால் Oswald Gracias கூறினார்.
அண்மையில் திருச்சபைக்கும் திருத்தந்தைக்கும் எதிராக கூறப்படும் அவதூறுகளுக்கு மத்தியில், வயது வந்த இத்தனை பேர் திருமுழுக்கு பெற முடிவெடுத்து வந்துள்ளது, இந்தப் பிரச்சனைகள் அவர்களது தீர்மானத்தை எந்தவகையிலும் பாதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்று கூறினார் கர்தினால் Gracias.
தகாத பாலியல் உறவுகளால் எழுந்துள்ள இந்த பிரச்சனையைத் திருத்தந்தை மூடி மறைக்கின்றார் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று கூறிய கர்தினால் Gracias, மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலும், தற்போதைய திருத்தந்தை 16ம் பெனெடிக்டும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண எவ்வளவு முயன்றுள்ளனர் என்பதைத் தான் நேரில் கண்டு உணர்ந்ததாகக் கூறினார்.
வருகின்ற நாட்களில் இந்திய ஆயர் பேரவை கூடி, இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் முறை குறித்து விவாதிக்க இருப்பதாக கர்தினால் Gracias மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.