2010-04-06 16:55:34

விவிலியத் தேடல்


RealAudioMP3
ஆழ் கடலில் முத்தேடுக்கச் செல்வோம் வாருங்கள் அன்பர்களே. விவிலியம் ஒரு பெருங்கடல் என்பது அனைவரும் அறிந்த ஓர் உண்மை. இந்தக் கடலில் நாம் கண்டெடுத்த முத்துக்கள் பல. கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி, விவிலியத் தேடலில் இயேசுவின் புதுமைகள் என்ற முத்துக்களையும், தவக்காலத்தில், இயேசு சிலுவையில் கூறிய அந்த ஏழு சொற்கள் என்ற முத்துக்களையும் கண்டெடுத்தோம். இந்த விவிலியத் தேடல் துவங்கி, இனி வரும் வாரங்களில் சங்கீதங்கள் என்று நாம் வழக்கமாகக் கூறும் திருப்பாடல்கள் நூலிலிருந்து முத்துக்களை எடுப்போம். தொடுப்போம். (Interlude)

என் நண்பர் ஒருவரும் அவரது மனைவியும் ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஜெபக் கூட்டங்களில் கலந்து கொள்வர். பல ஜெபக் கூட்டங்களை முன்னின்று நடத்துவர். ஒவ்வொரு ஜெபக் கூட்டத்திற்கும் அவர்கள் தவறாமல் எடுத்துச் செல்வது அவர்களது விவிலியம். அவர்களிடம் இருந்த விவிலியத்தைக் கண்டு நான் வியந்ததுண்டு. அந்த இரு விவிலியங்களும் கொஞ்சம் அழுக்காய், ஓரங்கள் மடிந்து, ஒரு சில பக்கங்கள் தையல் பிரிந்து வெளியே வந்து... பார்க்கப் பரிதாபமாய் இருக்கும். புது விவிலியங்கள் அவர்களுக்குப் பரிசாக வந்தாலும், பல ஆண்டுகளாய் அவர்கள் பயன்படுத்திய அந்த விவிலியங்கள்தான் அவர்கள் எப்போதும் கொண்டு செல்லும் பொக்கிஷங்கள். அந்த விவிலியங்களை நான் புரட்டிப் பார்த்தபோது, திருப்பாடல்கள் பகுதி பக்கம் பக்கமாக தையல் பிரிந்து, ஒரு சில பக்கங்கள் லேசாகக் கிழிந்து, ஒட்டுபோடப்பட்டிருந்தன. அதற்கடுத்தபடியாக, அதிகம் சிதைந்திருந்த மற்றொரு பகுதி நற்செய்தி பகுதி.

என் விவிலியத்திற்கும் இதே கதி தான். உங்களிடம் உள்ள விவிலியமும் இப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். விவிலியத்தின் பக்கங்கள், அழுக்கேறி, கிழிந்து போய் ஒட்டப்பட்டு, தையல் பிரிந்திருப்பதில் இவ்வளவு பெருமையா? ஆம் அன்பர்களே... இப்படி ஒரு நிலை நம் விவிலியங்களுக்கு ஏற்படுவது பெருமைக்குரிய விஷயம். விவிலியத்தை அவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பது தானே இதன் பொருள்.
நீங்கள் பயன்படுத்தும் விவிலியத்தைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். அங்கு மிக அதிகமாக, மிகப் பல சூழ்நிலைகளில் நாம் பயன்படுத்தும் ஒரு நூல்... திருப்பாடல்கள் என்பது உங்களுக்குத் தெரிய வரும். திருப்பாடல்கள் அள்ள, அள்ளக் குறையாத ஓர் அமுதசுரபி. பட்டை தீட்டப்பட்ட ஒரு வைரம். தோண்ட, தோண்ட வெளிவரும் ஒரு நீர்ச்சுனை... உங்களுக்குத் தெரிந்த பல்வேறு அடைமொழிகளில் இந்நூலை வர்ணிக்கலாம். அனைத்தும் இந்த நூலுக்குப் பொருந்தும்.
நமது தனிப்பட்ட வாழ்வில் பல நிகழ்வுகளில், பல்வேறு மன நிலைகளில் இந்த நூலை பயன்படுத்தியிருக்கிறோம். பலனும் பெற்றிருக்கிறோம். திருப்பாடல்களின் வரிகளைத் தனியே தியானித்திருக்கிறோம். அதே போல், நமது இல்ல வைபவங்களில், குழு செபங்களில், திருவழிபாடுகளில் நாம் திருப்பாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். எனவே இது ஒரு அமுதசுரபி.
ஒவ்வொரு முறையும் ஒரு சங்கீதத்தைப் பயன்படுத்துகிறோம். அடுத்த முறை அதே சங்கீதத்தை வேறொரு நாள் படிக்கும் பொது அன்றையச் சூழ்நிலைக்குத் தகுந்தது போல் அந்தத் திருப்பாடல் நமக்கு பொருள் தருவதையும் உணர்ந்திருக்கிறோம். எனவே, இந்த நூல் ஒரு வைரம். பலவித ஒளியில் பலவித வண்ணங்களைத் தருகின்றதே. அதனால் இது ஒரு வைரம். (Interlude)


விவிலியத்திலேயே திருப்பாடல்கள் நூலும், புதிய ஏற்பாடும் மிக அதிகமாகப் பயன்படும் நூல்கள் என்பதால், பல புதிய ஏற்பாடு பதிப்புகளில் திருப்பாடல்கள் நூலும் இணைக்கப்பட்டுள்ளது. திருப்பாடல்கள் ஒரு சராசரி நாளில் எவ்வளவு அதிகமாய் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு கணக்கு.

கத்தோலிக்க அல்லது கிறிஸ்தவ திருவழிபாடுகளில் வருடத்தின் 365 நாட்களில் குறைந்தது 300 நாட்களாகிலும் திருப்பலியில் பதிலுரைப் பாடலாக திருப்பாடல்கள் இடம் பெறும். ஒரு நாளுக்கு 24 மணி நேரங்கள். அந்த 24 மணி நேரங்களில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு திருப்பலி நிகழ்ந்த வண்ணம் இருக்கும்... அங்கு திருப்பாடல்கள் ஒலிக்கும். இதுவன்றி, பல துறவு மடங்களில், குரு மடங்களில், தினமும் காலை, மதியம், மாலை செபங்களில் திருப்பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரு நிகழ்வுகளை மட்டும் வைத்துப் பார்க்கும் போது, உலகம் என்ற கோளத்திலிருந்து பாடல்களாக, வாசகமாக, செபமாக திருப்பாடல்கள் என்ற நூலின் பல பகுதிகள் வான் வெளியில் 24 மணி நேரமும் 365 நாட்களும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

இது அல்லாமல், தனிப்பட்டவர்களின் வீட்டு வைபவங்களில், செபக் கூட்டங்களில், நோயுற்றோர் படுக்கையருகில் என்று பல சூழ்நிலைகளிலும் இந்த நூலின் பல பகுதிகள் வாசிக்கப்பட்ட வண்ணம் இருக்கும். மொத்தத்தில், இந்த உலகத்தை ஒரு மனிதப் பிறவியாக கற்பனை செய்தால், திருப்பாடல் அந்த மனித உயிர் இடைவிடாமல் உள்வாங்கி வெளிவிடும் மூச்சைப் போல் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். (Interludi)

அமுதசுரபி, வைரம், நமது மூச்சு... இப்படி பல வகையில் நாம் சிந்திக்கும் இந்த நூல் இவ்வளவு புகழ் பெற காரணம் என்ன? இந்த நூலில் பெரிய அறிவுசார்ந்த தத்துவங்கள் இல்லை, இது ஒரு வரலாற்று நூல் இல்லை. இந்த நூல் தருவதெல்லாம் செபங்களும், கவிதைகளும். நம் தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் காணக் கிடக்கும் பல உண்மைகளை, உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, மகிழ்ச்சிகளை, துக்கங்களை எடுத்துக்கூறும் எளிய நூல்.
வாழ்க்கையின் எதார்த்தங்கள் இந்த நூலின் பல பாடல்களில் எதிரொலிப்பதால், வாழ்வின் பலச் சூழல்களுக்கு இதிலிருந்து பொருள் தேடிக் கொள்கிறோம். நம் தேடுதல் சில சமயங்களில் குழந்தைத் தனமாக இருப்பது போல் தெரியலாம்.
உதாரணமாக, நம்மில் பலர் வாழ்வில் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணும் போது, ஒரு முக்கிய முடிவெடுப்பதற்கு முன், விவிலியத்தைக் கையில் எடுத்து, கண்களை மூடி எதேச்சையாக ஒரு பக்கத்தைத் திறப்போம், அங்கு நம் கண்களில் படும் விவிலிய வசனத்தை படிப்போம். அது நமக்கு இறைவன் வழங்கும் வார்த்தையாக, நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைக்கு ஒரு முடிவாக நாம் ஏற்போம்.
இப்படி ஒரு சூழ்நிலையில் நாம் விவிலியத்தில் அடிக்கடி திறக்கும் ஒரு பகுதி திருப்பாடல்கள் நூலாக இருக்கும். எப்படி? எந்த ஒரு விவிலியத்திலும், பழைய ஏற்பாட்டின் மையப் பகுதியில் இந்தப் புத்தகம் அமைந்திருப்பதால், இப்படி எதேச்சையாகப் பிரிக்கும் நேரத்தில் பல முறை திருப்பாடல்கள் நூலை நாம் பிரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படி வாழ்வில் பிரச்சனைகளைத் தீர்க்க, முக்கியமான முடிவுகள் எடுக்க, நம்மில் பலருக்கு திருப்பாடல்கள் நூல் உதவியிருக்கும். பொதுவாகவே திருப்பாடல்கள் புத்தகம் விவிலியத்தின் மையப் பகுதியாக இருப்பதை பலரும் பல வழிகளில் உணர்ந்திருக்கிறோம்.
பழைய ஏற்பாட்டுக்கு மத்தியில் மட்டுமல்ல, விவிலியத்தின் மையப் பகுதியாக திருப்பாடல்கள் இருப்பதை ஒரு முறை மின்னஞ்சலில் வந்தத் தகவல் எனக்குச் சொல்லியது. இன்றும் இந்தத் தகவல் இணையதளத்தில் உள்ளது. ‘Centre of the Bible’ ‘விவிலியத்தின் மையம்’ என்று இணைய தளத்தில் தேடினால், நமக்குக் கிடைக்கும் தகவல்கள் இவை: விவிலியத்தின் மையம் திருப்பாடல்களின் 118ஆம் அதிகாரம். அதாவது, 118ஆம் திருப்பாடலுக்கு முன் விவிலியத்தில் 594 அதிகாரங்கள் உள்ளன. 118ஆம் திருப்பாடலுக்குப் பின் 594 அதிகாரங்கள் உள்ளன. இந்த இணையதளத்தில் இன்னும் பல தகவல்கள் உள்ளன. வாசித்துப் பாருங்கள். எதேச்சையாகவோ, எண்ணிக்கை வழியாகவோ நாம் கண்டெடுக்கும் திருப்பாடல்கள் ஏதாவது ஒரு நல்ல செய்தியை நமக்குத் தரும். உதாரணத்திற்கு இப்போது நாம் சொன்ன அந்த 118 ஆம் திருப்பாடல் அழகான ஒரு நன்றிப் புகழ் மாலை. அந்தத் திருப்பாடலை முழுவதும் இன்று வாசித்துப் பாருங்கள். பயனடைவீர்கள். அந்தத் திருப்பாடலிலிருந்து ஒரு சில வரிகளை இப்போது கேட்போம்.
திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 118
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு... நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்: ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார். ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!... ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்: உயிர் வாழ்வேன்: ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்... கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே: இன்று அக்களிப்போம்: அகமகிழ்வோம்... ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்... ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 
நான் ஒரு முறை ஒரு கன்னியர் மடத்திற்கு தவக் காலத்தின் போது சென்றேன். அங்கிருந்த கன்னியர் ஒரு அழகிய பழக்கத்தைப் பின் பற்றுவதைக் கண்டேன். விவிலியத்தின் பல வாசகங்கள், அதிலும் முக்கியமாக திருப்பாடல்களிலிருந்து எடுக்கப்பட்ட வசனங்கள் சிறு துண்டு அட்டைகளில் எழுதப்பட்டிருந்தது. தவக் காலத்தின் ஒவ்வொரு நாளும் அவர்கள் காலை செபங்கள், திருப்பலி முடித்து காலை உணவிற்கு வரும் போது, ஒவ்வொருவரும் ஒரு அட்டையை எடுப்பார்கள். அதில் காணப்படும் இறைவார்த்தைகளின் படி அவர்களது அன்றைய தியானங்கள், செயல்பாடுகள் இருப்பதற்கு முயற்சி செய்வார்கள்.
நான் குறிப்பிட்டுள்ளவைகள் பொதுவாக விவிலியம் எப்படி பயன்படுகிறது என்பதற்கு. இந்த செயல்பாடுகளில் அதிகம் பயன்படுவது திருப்பாடல்கள்.
 திருப்பாடல்கள் அல்லது சங்கீதங்கள் என்ற நூலில் நம் விவிலியத் தேடலை ஆரம்பித்திருக்கிறோம். முதல் சில தேடல்களில் இந்த நூலின் தனி சிறப்புகளைச் சிந்தனை செய்வோம். இந்த நூல் ஒரு கவிதைத் தொகுப்பு என்று, இசைக்கு ஏற்ற பகுதி என்று, செபிக்கக் கற்றுத் தரும் பகுதி என்று நாம் தொடர்ந்து விவிலியத் தேடல் நிகழ்ச்சிகளில் சிந்திப்போம்.







All the contents on this site are copyrighted ©.