2010-04-06 16:55:21

ஏப்ரல், 07 நாளுமொரு நல்லெண்ணம்


RealAudioMP3
1948ஆம் ஆண்டு ஏப்ரல் 07ஆம் தேதி WHO (World Health Organisation) எனப்படும் உலக நல நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள். ஏப்ரல், 07 - உலக சுகாதார நாளாக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நல்லெண்ணத்தில் நலம் பற்றி சிந்திக்க முயல்வோம்.
1948 வரை உலகத்தில் "Sane mind in a sound body" அதாவது, "வலிமை வாய்ந்த உடலில் வளமையான அறிவு" என்பதே நலம் என்ற சொல்லுக்கு இலக்கணமாய் இருந்தது.
இரண்டாம் உலகப் போர் இந்த இலக்கணத்தை மறு பரிசீலனைச் செய்ய வைத்தது. அந்தப் போர் முடிந்து 1948ல் WHO நிறுவப்பட்ட நேரத்தில் எது நலம் என்பதற்குப் புதிய இலக்கணம் வகுக்கப்பட்டது.
"Health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity." "நலம் என்பது நோயின்றி, உடல் குறையின்றி இருப்பது மட்டுமல்ல. மாறாக, உடல், மனம், சமுதாயம் என்ற மூன்று நிலைகளிலும் நல் முறையில் வாழ்வதே நலம்." என்ற புது இலக்கணம் சொல்லப்பட்டது.
2008 ஆம் ஆண்டு உலக நல நிறுவனத்தின் 60ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் போது, நலம் என்ற சொல்லின் இலக்கணம் பற்றி பல விவாதங்கள் எழுந்தன. இன்றும் தொடர்கின்றன. உடல் குறையுள்ளவர்களும், அதாவது மாற்றுத் திறனுடையோரும் நலம் என்ற இலக்கணத்திற்கு உட்பட்டவர்கள் என்ற எண்ணம் அதிகமாய்ப் பரவியுள்ளது. அதே போல் உடல், மனம், சமூகம் என்ற மூன்று கூறுகளுடன் ஆன்மிகம் என்ற கூறும் இணைக்கப்பட்டுள்ளது.
“உடல் குறைகளுடன் வாழப் பழகிக் கொள்வதே நலமான வாழ்வு” என்பது இன்றைய பரவலான எண்ணம். Sigmund Freud நலம் பற்றிக் கூறிய இலக்கணம் மிக எளிதான, தெளிவான ஒன்று. “Health is the capacity to love and work.” அன்பு செய்வதற்கும், பணிகள் செய்வதற்கும் உள்ள நம் திறமையே நலம் என்பது Freudன் கருத்து.நலம் பற்றிய இலக்கணங்களை மாற்றுவது மட்டும் போதாது. அவற்றை வாழ்வுக்கான வழிகாட்டிகளாகவும் மாற்ற முயல்வோம்.







All the contents on this site are copyrighted ©.