2010-04-05 15:20:46

வாரம் ஓர் அலசல் கால் இழந்தோருக்கு காலாய் இருப்போமா!


ஏப்ரல் 05,2010 “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ? சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?.....” ஊனமுற்றநாயகனுக்காககண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் இவை. வசந்த காலம் வந்துவிட்டால் உரோமை நகரத் தெருக்களில் சக்கர வண்டிகளில் பலவகையான, பல வயதுடைய மாற்றுத் திறனாளிகளைப் பார்க்க முடியும். அவர்கள் எவ்வளவு பெரிய உருவங்களாக இருந்தாலும், அவர்கள் வாயிலிருந்து தொடர்ந்து வடியும் வாணியைத் துடைத்துக் கொண்டும், அப்படியே சிலைபோல் உட்கார்ந்திருப்பவர்களை மகிழ்ச்சியோடு வண்டிகளில் தள்ளிக் கொண்டும் செல்லும் சேவை உள்ளங்களைக் கண்டு அதிசயித்ததுண்டு. அதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உரோமை நினைவுச் சின்னங்கள் பற்றி விளக்குவதைக் கேட்டு அங்கேயே ஸ்தம்பித்து நின்ற அனுபவமும் இருக்கிறது. இந்த மாற்றுத் திறனாளிகள் இப்படி இருப்பதற்கான காரணங்கள் என்னவென்று அவர்களை அழைத்து வந்திருந்த அந்த சேவை மையத்தின் மருத்துவர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கதை கதையாய்ச் சொன்னார்.

இவள் பெயர் நியாமி. தென்சூடானைச் சேர்ந்தவள். இவளுக்கு அப்போது வயது பத்து. அவள் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் கல் போன்று தெரிந்த ஒன்றை எடுத்து அப்புறப்படுத்த முயன்றாள். அப்போது அந்த இடத்தில் திடீரென பூமியிலிருந்து குண்டு வெடித்ததில் அவளது இடது கால் போய்விட்டது. இத்தகைய விபத்துக்களைப் பரவலாகச் சிறார் மத்தியில் காண முடிகின்றது. ஏனெனில் சிறார் தாங்கள் காண்பதை எடுத்து விளையாடுகின்றவர்கள். அது அவர்களுக்கு வெடிகுண்டுகள் என்று தெரிவதில்லை.

இவன் பெயர் “லே சோக்கும்”. கம்போடியா நாட்டைச் சேர்ந்தவன். இரண்டு சக்கர மிதிவண்டியில் தினமும் பள்ளிக்குச் சென்று வந்தவன். 2002ம் ஆண்டில் ஒருநாள் இவனது தந்தையுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு புதைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இரண்டு கால்களையும் இழந்து விட்டான்.

உலகில் உள்நாட்டுச் சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் அல்லது நடந்து முடிந்த இடங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளால் அப்பாவிபொதுமக்கள், வாழ்க்கை முழுவதும் எதிர்கொள்ளும் அங்கக் குறைபாடு மற்றும் அதனால் ஏற்படும் உளவியல் பிரச்சனைகள் பற்றி அந்த மருத்துவர் விளக்கியதில் இரண்டை மட்டுமே சொன்னோம். மூன்றாண்டுகளுக்கு முன்னர் நேயர் சந்திப்புக்காக மன்னார் சென்ற போது அங்கு கண்ணிவெடிகளால் உடல் உறுப்புக்களை இழந்தோரைக் காண முடிந்தது. மன்னாரிலிருந்து கொழும்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது படைவீரர்கள் அதிகாலையில் பத்து அடிக்கு ஒருவராக கையில் ஒரு தடியுடன் எதையோ ஆராய்ச்சி செய்வது போல் இருந்தது. உடன் பயணம் செய்த நபரிடம், “இவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டேன். இரவில் இவ்விடங்களில் விடுதலைப் புலிகளால் கண்ணிவெடிகள் புதைக்கப்படும். எனவே அதை ஒவ்வொரு நாள் காலையிலும் இப்படிச் சோதிக்கிறார்கள் என்றார்.
கண்ணிவெடிகள் என்பவை எதிரிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு அவர்களுக்குத் தெரியாமலே வைக்கப்படும் பொறிவெடிகள் என்று சொல்லப்படுகின்றன. புறா, கானாங்கோழி, கெளதாரி, முயல், காட்டுக்கோழி போன்றவற்றுக்கு வைக்கும் பொறியை 'கண்ணி' என்றுதானே சொல்கிறோம். உலோகம், பிளாஸ்டிக் அல்லது மரத்தாலான சிறிய கலன்களில் வெடிமருந்துகள் வைக்கப்பட்டு நிலத்துக்கு அடியில் புதைக்கப்படுகின்றன. கடலில் வைக்கப்படும் கடல்கண்ணிவெடிகளும் இருக்கின்றன. மனிதர்கள் மிதிக்கும்போது வெடிப்பவைகளை மிதிவெடிகள் என்றும் வாகனங்களைத் தாக்கக்கூடியவைகளை வாகனயெதிர்ப்புக் கண்ணிவெடிகள் என்றும் சொல்கிறார்கள். வாகன எதிர்ப்புக் கண்ணிவெடிகளில் பத்துக் கிலோ வெடிமருந்து இருக்கும் என்றும் உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் வாகனயெதிர்ப்புக் கண்ணிவெடியாக அமெரிக்கத் தயாரிப்பு M15 ஐச் சொல்லலாம் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தக் கண்ணி வெடிகள் இன்று நேற்று அல்ல, தொண்மை காலத்திலே அதாவது கி.பி. 600ம் ஆண்டிலே வடசீனாவில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. பின்னர், 15ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற Agincourt சண்டையிலும், 18ம் நூற்றாண்டில் அமெரிக்க உள்நாட்டுச் சண்டையிலும், இரண்டு உலகப் போர்களின் போது பீரங்கி வண்டிகளைத் தகர்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரில் மட்டும் முப்பது கோடிக்கு மேற்பட்ட வாகன எதிர்ப்புக் கண்ணிவெடிகளும் அதேசமயம் மனிதரைக் கொல்லும் கண்ணி வெடிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஒரு காரணம் ஒரு வெடியைத் தயாரிப்பதற்கு குறைந்தது மூன்று அமெரிக்க டாலரே தேவைப்படுகின்றது. மேலும் இதனை எளிதாகவும் வைத்துவிட முடிகின்றது.

1945ம் ஆண்டுக்குப் பின்னர் உலகெங்கும் விடுதலைப் போர்களுக்கும் உள்நாட்டுச் சண்டைகளுக்கும் உள்ளூர் மோதல்களுக்கும் இவை பயன்படுத்தப்பட்டதால், நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் மறுவாழ்வுக்கும், அமைதி உடன்படிக்கையை நடைமுறைபடுத்துவதற்கும் பெரும் தடைகளாக இருக்கின்றன. வெடிக்காத குண்டுகள் தரையில் புதைந்திருப்பதால், போர் முடிந்த பின்னரும்கூட மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் வேளாண்மைக்கும் சாலைகளைச் சீரமைப்பதற்கும் பாலங்கள் கட்டுவதற்கும் தடங்கல்களாக இருக்கின்றன. இவ்வெடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வழக்கமான வேலை செய்ய முடியாமல் இருக்கின்றனர். ஏழை நாடுகளுக்கு இந்நிலை மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. ஏனெனில் ஒரு கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்டுபிடித்து அதை அழிப்பதற்கு முன்னூறு முதல் ஆயிரம் டாலர் வரை செலவாகிறது. இதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்க்கு ஒரு செயற்கை கால் பொருத்துவதற்கும் நூறு முதல் ஆயிரம் டாலர் வரையும் செலவாகிறது. இலங்கையில்கூட போர்க்கால அகதிகள் முழுமையாக மீள் குடியேற்றம் செய்யப்படாமைக்கு கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் இருப்பதையே ஒரு காரணமாகச் சொல்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இவ்வெடிகளால் இறந்தவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் இராணுவத்தினர். ஆனால் தற்சமயம் இதற்குப் பலியாகுவோரில் 90 விழுக்காட்டினர் அப்பாவி பொது மக்கள். 1980களின் இறுதி மற்றும் 1990களின் துவக்க காலங்களில் இருபதாயிரம் முதல் இருபத்தையாயிரம் வரை மக்கள் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக இதற்குப் பலியானார்கள். இந்த மனிதாபிமானப் பேரிடரைக் காணச் சகியாத பொதுமக்கள் சமுதாயம், நிலக்கண்ணி வெடிகளைத் தடை செய்ய வேண்டுமென சர்வதேச அளவில் முயற்சியில் இறங்கியது. அதன் பயனாக 1997ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி “ஒட்டாவா ஒப்பந்தம்” அதாவது “நிலக்கண்ணி வெடிகள் தடை ஒப்பந்தம்” கொண்டுவரப்பட்டது. எனினும் இது 1999ம் ஆண்டுதான் அமலுக்கு வந்தது. தற்சமயம் 156 நாடுகள், அதாவது உலகின் எண்பது விழுக்காட்டு நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. டப்ளினில் இது அறிவிக்கப்பட்ட போது சக்கரவண்டிகளில் வந்திருந்தவர்கள் உட்பட பலர் பலூன்களைப் பறக்கவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அச்சமயம் உரையாற்றிய கொத்துவெடிகுண்டுகள் ஒழிப்பு கூட்டமைப்பின் Steve Goose இவ்வெடிகளால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலையை விளக்கினார். இன்று உலகில் ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கும் யாராவது ஒருவர் இதனால் இறக்கின்றனர். சுமார் 84 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் எட்டு கோடி கண்ணிவெடிகள் இன்னும் புதையுண்டுள்ளன.

இந்தக் கண்ணிவெடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதனால் பாதிக்கப்பட்டவர்க்கு உதவிகள் வழங்கப்படுவதை ஊக்குவிக்கவுமென ஒரு சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட வேண்டுமென ஐ.நா.பொது அவையில் 2005ம் ஆண்டு டிசம்பர் எட்டாம் தேதியன்று தீர்மானிக்கப்பட்டது. அந்த நாள் ஏப்ரல் நான்காம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. தற்சமயம் நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 4ம் நாள், இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த உலக தினத்தை முன்னிட்டு உலகினருக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த வெடிகளைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடாத நாடுகள் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுத்தார். இந்த ஒப்பந்தத்திற்குத் திருப்பீடம் எப்பொழுதும் ஆதரவளிக்கின்றது என்றும் கூறினார்.

இத்தினத்தையொட்டிப் பேசிய NPA என்னும் நார்வேமக்கள் உதவி அமைப்பின் திட்ட நிர்வாகி Frode Steinsvik, 21 வருடங்கள் உள்நாட்டுச் சண்டை இடம் பெற்ற ஆப்ரிக்க நாடான சூடானின் தென்பகுதியில் இந்த வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் இடங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. 1,20,000 சதுர மீட்டர் நிலப்பகுதியில் ஆறுமாதங்கள் வேலை செய்து எட்டு வெடிகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்திருக்கிறோம் என்றார். ஆப்கானிஸ்தானில் கடந்த இருபது ஆண்டுகளில் எழுபதாயிரத்துக்கு அதிகமானோர் இறந்துள்ளனர் மற்றும் முடமாகியுள்ளனர். இந்நாட்டில் நிலக்கண்ணி வெடிகளால் மாதத்திற்கு அறுபது பேர் வீதம் பலியாகின்றனர்.
உலகில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் சிறார் வரை ஒவ்வோர் ஆண்டும் இவ்வெடிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

அன்பர்களே, இஞ்ஞாயிறன்று பல நாடுகளில் நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த வெடிகளால் பாதிக்கப்பட்டோருக்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதையும் இந்நாள் சிந்திக்க அழைக்கிறது. இந்தியாவின் ஜெய்ப்பூர் செயற்கைக்கால் தயாரிக்கும் “பகவான் மகாவீர் விக்லாங் சகாயதா சமிதி” என்ற பிறரன்பு அமைப்பு இலங்கையில் கால்களை இழந்த பலருக்கு செயற்கைக்கால்களை வழங்கும் பணியைச் செய்து வருகிறது. ஆப்கான், லெபனான், நைஜீரியா, பாகிஸ்தான், சொமாலியா, சூடான், சியரா லியோன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு செயற்கைக் கால்களை வழங்கி உள்ளது. தமிழக அரசும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் கருணாநிதியின் நேரடிப் பார்வையில் தனித்துறை அமைக்கப்படும் என்று அண்மை நிதிநிலை அறிக்கையின்போது அறிவித்துள்ளது.

பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டும் சுயமரியாதையை இழந்தும் வாழும் இம்மாதிரி முடமானவர்களை நாம் அணுகும் விதம் எப்படி இருக்கிறது? 'ஒரு முடிவிருந்தால்... அதில் ஒரு தெளிவிருந்தால்... வானம் வசமாகும்!' என்பார்கள். உதவி செய்வதற்கான வாய்ப்புகள் பல இருக்கின்றன. வாய்ப்புகள் கதவைத் திறக்கும் போது காற்றாய் உள்ளே புகுவோமா அன்புள்ளங்களே!.

இணையதளத்தில் வாசித்த ஒரு குறிப்பை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
என் பிராத்தனைகளை அந்த ஆண்டவன் கேட்பதை,
நான் உணராவிட்டால், அவன், காது கேளாதவன் என்கிறோம்.
என் கேள்விகளுகெல்லாம் அவன்
அமைதியாய் சொல்லும் பதில்களை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், வாய் பேச முடியாதவன்.
என் செயல்களில் உள்ள நல்ல வற்றை
அவன் பார்ப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், பார்வை அற்றவன்.
என் பிரச்சனைகளை தீர்த்துவைக்க
ஒவ்வொறு முறையும் அவன் கைகொடுப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், கைகள் இல்லாதவன்.
என் தனிமையான பயணங்களில் என் தோழனாய்
என்னுடன் அவன் நடப்பதை
நான் உணராவிட்டால்,
அந்த ஆண்டவன், கால்கள் இல்லாதவன்.
இதை நாம் உணராவிட்டால், அந்த ஆண்டவனே ஊனமாகிவிடுகிறான்!!!
யாரோ செய்த தவற்றால் உறுப்புக்களை இழந்த நம் நண்பர்களின் கதி?ஆதரிப்போம் நம் உணர்வுகளால்!!!







All the contents on this site are copyrighted ©.