2010-04-04 15:08:44

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் ஊர்பி எத் ஓர்பி செய்தி


ஏப்ரல்04,2010 இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் ஏறத்தாழ ஒரு இலட்சம் திருப்பயணிகள் கூடியிருந்தனர். அவர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய ஊருக்கும் உலகுக்குமான “ஊர்பி எத் ஓர்பி செய்தி”.

Cantemus Domino: gloriose enim magnificatus est. “ஆண்டவருக்குப் பாட்டுப் பாடுங்கள். அவரது வெற்றி மகத்தானது!”

RealAudioMP3 அன்புச் சகோதர சகோதரிகளே,

திருவழிபாட்டில் இந்த வார்த்தைகளில் உயிர்ப்பு அறிவிப்பை நான் உங்களுக்குக் கொண்டு வருகிறேன். இது, இஸ்ராயேல் மக்கள் செங்கடலைக் கடந்த பின்னர் பாடிய பழமையான புகழ்ப் பாடலை எதிரொலிக்கிறது. இது, விடுதலைப்பயண நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. (15:19-21) அவர்கள் உலர்ந்த தரையில் கடலைக் கடந்த போதும், எகிப்தியர்கள் தண்ணீரில் மூழ்கியதைப் பார்த்த போதும் மோசே மற்றும் ஆரோனின் சகோதரி மிரியமும் மற்றபெண்களும் “ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள், ஏனெனில் அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்: குதிரையையும் குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்!” என்ற இந்த மகிழ்ச்சிப் பாடலைப் பாடினார்கள். உலகெங்குமிருக்கின்ற கிறிஸ்தவர்கள் உயிர்ப்புத் திருவிழிப்பில் இந்தப் பாடலையும் அதன் பொருளை விளக்கும் சிறப்பு செபத்தையும் சொல்கிறார்கள். இந்தச் செபத்தை, உயிர்ப்பின் முழுஒளியில், இப்பொழுது நாம் மகிழ்ச்சியோடு நமது சொந்த செபமாக ஆக்குகிறோம். “தந்தையே, நீண்ட காலத்திற்கு முன்னர் நீர் செய்த அற்புதங்களின் மகிமைகளை இன்றும் காண்கிறோம். ஒருமுறை ஒரு தனிப்பட்ட நாட்டை அடிமைத்தளையிலிருந்து மீட்டீர், இப்பொழுது அந்த மீட்பைத் திருமுழுக்கு வழியாக நீர் எங்களுக்கு வழங்குகிறீர். உலகின் மக்கள் அனைவரும் ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகளாக மாறுவார்களாக, இஸ்ரயேலின் மரபுரிமைக்கு தகுதியுள்ளவர்கள் என நிரூபிப்பார்களாக!”

பழங்கால சிறப்பியல்களை நிறைவு செய்வதில் நற்செய்தி இதனை நமக்கு வெளிப்படுத்தியுள்ளது. இயேசு கிறிஸ்து தமது மரணம் மற்றும் உயிர்ப்பில் பாவத்தின் அடிமைத்தனத்தினின்று நம்மை விடுவித்து, கடவுளின் அரசாகிய, நீதி, அன்பு அமைதி ஆகியவற்றின் உலகளாவிய அரசாகிய வாக்களிக்கப்பட்ட நிலத்தை நோக்கிய பாதையை நமக்குத் திறந்து வைத்தார். இந்த “விடுதலைப் பயணமானது” முதலில் மனிதனில் நடந்தேறுகிறது. கிறிஸ்து தமது பாஸ்காப் பேருண்மையில் நமக்குக் கொடுத்தத் திருமுழுக்கின் பயனாகத், தூய ஆவியில் புதிய பிறப்பு எடுப்பதில் இது அடங்கியுள்ளது. பழைய மனிதன் தனது இடத்தைப் புதிய மனிதனுக்கு கொடுக்கிறான். பழைய வாழ்வு பின்னுக்குத் தள்ளப்பட்டு, புதிய வாழ்வு தொடங்குகிறது(உரோ. 6:4). எனினும் இந்த ஆன்மீக “விடுதலைப் பயணமானது”, நமது மனித, தனிப்பட்ட சமூகம் என ஒவ்வொரு தன்மையிலும் புதுப்பித்தலை ஏற்படுத்தும் ஒருங்கிணைந்த விடுதலைக்கானத் தொடக்கமாக அமைகின்றது.

ஆம், எனது சகோதர சகோதரிகளே, இயேசுவின் உயிர்ப்பு மனித சமுதாயத்தின் உண்மையான மீட்பாகும்! கிறிஸ்து – கடவுளின் செம்மறி- தமது குருதியை நமக்காகச் சிந்தியிராவிட்டால் நாம் நம்பிக்கையின்றி விடப்படுவோம். நமது இறுதிக்கதியும் உலகிந் கதியும் மரணமாகவே இருந்திருக்கும். எனினும் இயேசுவின் உயிர்ப்பு அந்தப் போக்கை மாற்றியுள்ளது : முழுச் செடியையும் மீண்டும் உயிர்ப்பிக்கவல்ல ஒட்டுமுறை போன்று கிறிஸ்துவின் உயிர்ப்பு புதிய படைப்பாக இருக்கின்றது. இது நன்மை, வாழ்வு, மன்னிப்பு ஆகியவற்றின் பக்கம் நிறைவாக நின்று வரலாற்றை முற்றிலும் மாற்றிய நிகழ்வாகும். நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம், நாம் மீட்கப்பட்டிருக்கிறோம்!. எனவே நமது உள்ளத்தின் ஆழத்தினின்று : “ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள். அவரது வெற்றி மகத்தானது!” என்று உரத்த குரல் எழுப்புகிறோம்.

திருமுழுக்குத் தண்ணீரில் மூழ்கியுள்ள கிறிஸ்தவ மக்கள், இந்த மீட்புக்குச் சாட்சிகளாக அனுப்பப்படுகின்றனர், பாவத்திலிருந்து விடுதலை பெற்று அதன் மூலஅழகையும் நன்மைத்தனத்தையும் உண்மையையும் காக்கும் புதிய வாழ்வில் அடங்கியுள்ள உயிர்ப்பின் பலன்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல அவர்கள் அனுப்பப்படுகின்றனர். தொடர்ந்து, இந்த இரண்டாயிரம் ஆண்டு காலங்களில் கிறிஸ்தவர்கள், குறிப்பாகப், புனிதர்கள் தங்களின் உயிர்ப்பு அனுபவத்தை வாழ்ந்து வரலாற்றை பலனுள்ளதாக ஆக்கியிருக்கிறார்கள். திருச்சபை விடுதலைப் பயணத்தின் மக்களாக இருக்கின்றது. ஏனெனில் அது தொடர்ந்து பாஸ்காப் பேருண்மையை வாழ்ந்து வருகின்றது. ஒவ்வொரு காலத்திலும் இடத்திலும் அதன் புதுப்பிக்கப்பட்ட சக்தியால் அதை விதைத்து வருகிறது. இந்த நம் நாட்களிலும்கூட, மனித சமுதாயத்திற்கு மேலெழுந்தவாரியானதாக இல்லாமல், ஆன்மீக மற்றும் அறநெறி மாற்றம் கொண்ட “விடுதலைப் பயணம்” தேவைப்படுகின்றது. இதற்கு நற்செய்தியின் மீட்புத் தேவைப்படுகின்றது. இது ஆழமானப் பிரச்சனைகளிலிருந்து எழும்ப வேண்டியதாக இருக்கிறது. மனச்சான்றுகளில் தொடங்கி ஆழமான மாற்றம் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.

RealAudioMP3 மத்திய கிழக்கில், குறிப்பாக நம் ஆண்டவர் இயேசு தமது இறப்பாலும் உயிர்ப்பாலும் புனிதப்படுத்திய நிலத்தில், மக்கள் போர் மற்றும் வன்முறையிலிருந்து அமைதிக்கும் இணக்கத்திற்கும் உண்மையாகவும் தீர்மானமாகவும் “விடுதலை” அடைய வேண்டுமென்று நான் செபிக்கின்றேன். சோதனைகளையும் துன்பங்களையும் அனுபவிக்கும் கிறிஸ்தவ சமூகங்கள், குறிப்பாக ஈராக்கிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு, எருசலேம் மாடி அறையில் உயிர்த்த ஆண்டவர் தமது திருத்தூதர்களுக்குச் சொன்ன, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” (யோவா.20:21) என்ற ஆறுதலும், ஊக்கமும் நிறைந்த வார்த்தைகளை மீண்டும் சொல்கிறார்.

போதைப் பொருள் வியாபாரங்களோடு தொடர்புடைய குற்றங்களின் ஆபத்துக்களைக் கண்டுவரும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு, இயேசுவின் உயிர்ப்பு, அமைதியான நல்லிணக்கம் மற்றும் பொது நலனை மதிக்கும் வெற்றியின் அடையாளமாக இருக்கட்டும்.! நிலநடுக்கத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்ப்டடுள்ள அன்புமிக்க ஹெய்ட்டி மக்கள், சர்வதேச ஒருமைப்பாட்டால் ஆதரவளிக்கப்பட்டு அழுகை மற்றும் மனக்கசப்பினின்று, புதிய நம்பிக்கையின் “விடுதலைப்பயணத்தை” அனுபவிப்பார்களாக. மற்றுமொரு இயற்கைப் பேரிடரை எதிர்நோக்கியுள்ள அன்புமிக்க சிலே குடிமக்கள், தங்களின் விசுவாசத்தால் தாங்கப்பட்டு விடாஉறுதியுடன் மறுகட்டமைப்புப் பணியைச் செய்வார்களாக.

அழிவுக்கும் துன்பங்களுக்கும் தொடர்ந்து காரணமாகி வரும் ஆப்ரிக்காவில் இடம் பெறும் மோதல்கள் உயிர்த்த இயேசுவின் வல்லமையில் முடிவுக்கு வருவதாக. வளர்ச்சிக்கான உறுதிப்பாடு என்ற வகையில் அமைதியும் ஒப்புரவும் நலைப்பதாக. குறிப்பாக, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கினி மற்றும் நைஜீரிய நாடுகளின் எதிர்காலத்தை ஆண்டவரிடம் அர்ப்பணிக்கின்றேன்.

RealAudioMP3 தங்களின் விசுவாசத்திற்காக அடக்குமுறைகளால் துன்புறும், ஏன் மரணத்தையும் எதிர்நோக்கும் கிறிஸ்தவர்களை, உயிர்த்த ஆண்டவர் காப்பாராக. எடுத்துக்காட்டாக, பாகிஸ்தானில் இந்த நிலையில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். பயங்கரவாதம் மற்றும் சமூக, சமயப் பாகுபாட்டால் நைந்துள்ள நாடுகளுக்கு, உரையாடல் மற்றும் அமைதியான இணக்க வாழ்வைக் கட்டியெழுப்பும் சக்தியை அவர் அளிப்பாராக. நாடுகளின் தலைவர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு ஒளியையும் சக்தியையும் நல்குவதாக. இதனால் பொருளாதார மற்றும் நிதி நடவடிக்கைகள், உண்மை, நீதி மற்றும் சகோதரத்துவப் பண்புகளால் வழிநடத்தப்படுவதாக. கிறிஸ்துவின் உயிர்ப்பின் மீட்பளிக்கும் வல்லமை, மனித சமுதாயத்தை நிறைப்பதாக. பரவலாக அதிகரித்து வரும் மரணக் கலாச்சாரத்தின் பல கொடுமையான வெளிப்பாடுகளை மேற்கொள்வதற்கும், ஒவ்வொரு மனித வாழ்வும் மதிக்கப்பட்டு வரவேற்கப்படும் அன்பு மற்றும் உண்மையில் எதிர்காலம் கட்டப்படுவதற்கும் இதனால் இயலும்.

அன்புச் சகோதர சகோதரிகளே, இயேசுவின் உயிர்ப்பு வித்தைகளைச் செய்வதில்லை. செங்கடலின் தொலைதூரத்தில் பாலைநிலம் காத்திருப்பதை இஸ்ரயேலர்கள் கண்டது போல, திருச்சபையும் இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் மகிழ்ச்சி, நம்பிக்கை, துன்பம் துயரம் ஆகியவை நிறைந்த வரலாற்றை எப்பொழுதும் காண்கிறது. எனினும், இந்த வரலாறு மாறியுள்ளது. இது புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையால் குறிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வருங்காலத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இக்காரணத்திற்காக, நம்பிக்கையால் மீட்கப்பட்டு பழையதும் என்றும் புதியதுமான அந்தப் பாடலை நம் இதயங்களில் தாங்கிக் கொண்டு, நமது திருப்பயணத்தைத் தொடருவோம். “ஆண்டவருக்குப் பாட்டுப் பாடுங்கள். அவரது வெற்றி மகத்தானது!”

RealAudioMP3 இவ்வாறு தமது ஊர்பி எத் ஓர்பி செய்தியை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பின்னர் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.