2010-03-28 09:00:48

மார்ச் 29. தவக்காலச் சிந்தனை


RealAudioMP3 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் என்கிறார் இயேசு.

புனித வாரத்தின் துவக்கத்தில் நிற்கிறோம்.

எதற்காக யாருக்காக இறைமகன் இறந்தார்?,

இறைவனே மண்ணில் பிறந்து மரிக்க வேண்டிய காரணம் என்ன?

என்பது குறித்து இப்போதாவது நாம் ஆழமாக சிந்திக்கவேண்டும்.

ஒவ்வொரு இதயமும் இன்று எதை நோக்கி தங்கள் பார்வையைக் கொண்டுள்ளன?

செல்வத்திலும் சுகத்திலும் நம் வழ்வைத் தேடிக்கொண்டிருக்கின்றோமா?

அல்லது மற்றவர்களுக்காக நம்மையேக் கையளிக்கத் தயாராக இருக்கின்றோமா?

இயேசு பிறக்குமுன்னரே அன்னை மரி பாடினார்:

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார், என்று.

இவ்வுலகில் தன் பணியைத்துவக்கும் போது இயேசு கூறுகிறார் :

ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்

ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார், என்று. '

தன் பணியின் நோக்கம் குறித்து தெளிவுபடுத்திய இயேசு, அதே பாதையில் நமக்கும் சில அறிவுரைகளைத் தருகிறார்:

மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும், என்று.

ஏழைகளில் இயேசு வாழ்கிறார் என்பது உண்மையெனில் நம் உள்ளங்கள் இயேசு வாழும் ஏழைகளில் அல்லவா இருக்கவேண்டும். இச்சிந்தனை செயல்பட இப்புனித வாரம் உதவட்டும்.








All the contents on this site are copyrighted ©.