2010-03-27 15:10:26

25வது உலக கத்தோலிக்க இளையோர் தினம்


மார்ச்27,2010 25வது உலக கத்தோலிக்க இளையோர் தினமான இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூட்டுத் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

குருத்தோலை ஞாயிறன்று மறைமாவட்ட அளவில் கடைபிடிக்கப்படும் உலக கத்தோலிக்க இளையோர் தினத்தை முன்னிட்டு திருத்தந்தை நிகழ்த்தும் இத்திருப்பலியில் எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட இளையோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1985ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் உலக கத்தோலிக்க இளையோர் தினத்தை அறிவித்தார்.

மேலும், இத்தினத்தை முன்னிட்டு இவ்வியாழன் இரவில் உரோம் மற்றும் லாட்சியோ மாநிலப் பகுதியின் எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட இளையோரை வத்திக்கான் பேதுரு வளாகத்தில் ஏறத்தாழ ஒருமணி நேரம் சந்தித்து வாழ்வு பற்றிய பாடங்கள் குறித்து பேசினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

“போதகரே, முடிவில்லாத வாழ்வை அடைய நான் என்ன செய்ய வேண்டும்”? என்ற தலைப்பிலான இவ்வாண்டு உலக இளையோர் தினத்தை மையமாக வைத்து. இச்சந்திப்பில் மூன்று கேள்விகளைத் திருத்தந்தையிடம் கேட்டனர் இளையோர்.

“நித்திய வாழ்வு என்பதுகூட என்ன என்று தெரியாது. எனது வாழ்விலிருந்து அழகானதும் பெரியதுமான எதையாவது செய்ய முடியுமா?. “இயேசு நம்மை அன்புடன் நோக்குகிறார் என்பதை எப்படி புரிந்து கொள்வது? இதை எப்படி இன்றைய வாழ்வில் அனுபவிப்பது”?, “தன்மறுப்பை செய்வதற்கு சக்தியை எப்படி பெறுவது”? போன்ற கேள்விகளைத் திருத்தந்தையிடம் இளையோர் கேட்டனர்.

கிறிஸ்துவுக்கு நமது இதயத்தைத் திறந்து வைப்பதன் மூலமும், அவர் சொன்னதையும் செய்ததையும் அறிந்திருப்பதன் மூலமும், நமது அன்பின் மூலம் அவரிடம் செல்வதன் வழியாகவும் அவரைப் புரிந்து கொண்டு அவரை அனுபவிக்க முடியும் என்றார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.