2010-03-26 16:46:15

சீனாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் இன்னும் ஆழமான ஒன்றிப்பு உண்டாக வத்திக்கான் குழு பரிந்துரைத்துள்ளது


மார்ச்26,2010 சீனாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் இன்னும் ஆழமான ஒன்றிப்பு உண்டாகவும், அங்குள்ள சீன அரசுடன் கத்தோலிக்க திருச்சபை கொண்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காணவும் வேண்டுமென வத்திக்கான் குழு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.

2007ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட்டால் நிறுவப்பட்ட சீன கத்தோலிக்கத் திருச்சபைக்கான குழு ஒவ்வோர் ஆண்டும் சந்தித்து, அந்நாட்டின் திருச்சபை சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதித்து வருகிறது.

இவ்வாண்டு மார்ச் 22 முதல் 24 வரை நடைபெற்ற இந்தக் குழுவின் விவாதங்களில் தொகுக்கப்பட்ட கருத்துக்களைத் திருப்பீடத்தின் பத்திரிகை அலுவலகம் இந்த வெள்ளியன்று காலையில் வெளியிட்டது.

குரு மாணவர்களை உருவாக்குதல், அதிகாரப்பூர்வமாய் சீனாவில் செயல்படும் திருச்சபையிலும், மறைமுகமாய் பல ஆண்டுகளாய் அங்கு செயல்பட்டு வரும் திருச்சபையிலும் பணியாற்றும் குருக்கள், துறவியர் இவர்களுக்கிடையே ஒப்புரவு உண்டாவதற்கான வழிகளைக் கண்டுபிடித்தல், சுதந்திரமாய் செயல்பட உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள ஆயர்கள் குருக்கள் ஆகியோருக்கு செபித்தல் போன்ற கருத்துக்கள் இந்தக் கருத்துத் தொகுப்பில் காணக்கிடக்கின்றன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.