2010-03-26 16:41:59

சிறார்களை பாலின வகையில் தவறாக நடத்திய அமெரிக்க ஐக்கிய நாட்டு குரு ஒருவரின் மீது திருப்பீடம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு திருப்பீடம் மறுப்பு


மார்ச்26,2010 1960களுக்கும் 1974க்கும் இடைப்பட்ட காலத்தில் சிறார்களை பாலின வகையில் தவறாக நடத்திய அமெரிக்க ஐக்கிய நாட்டு குரு ஒருவரின் மீது திருப்பீடம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அந்நாட்டில் எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார் திருப்பீட பேச்சாளர் இயேசு சபை அ.பணி.பெடரிக்கோ லொம்பார்தி.

1970ம் ஆம்டுகளின் மத்தியில் அமெரிக்க ஐக்கிய நாட்டு காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் துவக்கப்பட்டிருந்தும் அரசு அதிகாரிகளாலேயே கைவிடப்பட்டுள்ளது இவ்வழக்கு என அறிய வந்துள்ளதாகக் கூறும் திருப்பீட பேச்சாளர், இதற்கும் இருபது ஆண்டுகளுக்குப் பின்னரே அதாவது 1990ம் ஆண்டுகளில்தான் குரு லாரன்ஸ் மர்பி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை கேட்டு திருப்பீடத்திற்குத் தெரிவிக்கப்பட்டன என்றார்.

இந்த இடைப்பட்ட இருபது ஆண்டுகள் எவ்வித பாலினக் குற்றச்சாட்டுகளும் இல்லாதிருந்த குரு மர்பி மிகவும் உடல்நலிவுற்றவராக இருந்ததால் அவர் தன் தவறுகளுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவரின் பொது வாழ்வுப் பணிகளில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமெனவும் விசுவாசக்கோட்பாட்டுத் திருப்பேராயம் மில்வாக்கி பேராயருக்கு கடிதம் அனுப்பியதாகவும் ஆனால் அடுத்த நான்கு மாதங்களில் அதாவது 1998ம் ஆண்டு ஆகஸ்டில் குரு மர்பி இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார் அ.பணி.லொம்பார்தி.

1990ம் ஆண்டுகளில் விசுவாசக்கோட்பாட்டுத் திருப்பேராயத் தலைவராக இருந்த தற்போதைய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இதில் நடவடிக்கை எடுக்கத் தவறினார் எனவும் குருக்களின் பாலினக் குற்றங்களை அரசு அதிகாரிகளிடம் முறையிட திருச்சபை சட்டங்கள் திருச்சபை அதிகாரிகளைத் தடுக்கின்றன எனவும் சிலர் குற்றம் சாட்டி வருவதற்கும் தன் வன்மையான மறுப்பை வெளியிட்டுள்ளார் திருப்பீட பேச்சாளர்.








All the contents on this site are copyrighted ©.